NZ vs ENG, 2nd Test: இங்கிலாந்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய நியூசிலாந்து!
நியூசிலாந்து - இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயன 2ஆவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் ஜூன் 10ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டி நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக விலகியதைத் அடுத்து, டாம் லேதம் கேப்டனாக பொறுப்பேற்றார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 303 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேனியல் லாரன்ஸ், ரோரி பர்ன்ஸ் தலா 81 ரன்களை எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் அசத்தலாக பந்துவீசிய ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்களையும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு டேவன் கான்வே, வில் யங், ராஸ் டெய்லர் ஆகியோர் அரைசதமடித்து வலிமான நிலைக்கு கொண்டு சென்றனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி 388 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்ஸை நிறைவு செய்தது. இதில் வில் யங் அதிகபட்சமாக 82 ரன்களையும், டேவன் கான்வே, ராஸ் டெய்லர் தலா 80 ரன்களையும் சேர்த்தனர்.
அதனைத் தொடர்ந்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.
அதனைத் தொடர்ந்து 85 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிற்கு 122 ரன்களை மட்டுமே சேர்த்து, 37 ரன்கள் முன்னிலைப் பெற்றது.
இங்கிலாந்து அணி தரப்பில் ஒல்லி ஸ்டோன் 29 ரன்களுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன் ஏதுமின்றியும் இன்றைய நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். இன்றைய நாள் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ட்ரெண்ட் போல்ட் இங்கிலாந்து அணியின் இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டு வந்தார்.
இதனால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 38 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக டேவன் கான்வே - டாம் லாதம் இணை களமிறங்கினர். இதில் கான்வே 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட்டிடம் விக்கெட்டை இழந்தார்.
அதன்பின் டாம் லாதம் - வில் யங் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி ஒருநாள் மீதமிருந்த நிலையிலேயே வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.