பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதலிரண்டு டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றிபெற்ற 2-0 என்ற கணக்கில் தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை வகித்துள்ளது.  இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள ஓவல் பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டிய்யில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Advertisement

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டெவான் கான்வே - ஃபின் ஆலன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் கான்வே 7 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் இணைந்த் ஆலன் - டிம் செய்ஃபெர்ட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் சிக்சர் மழை பொழிந்த ஃபின் ஆலான் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவுசெய்து மிரட்டினார். 

Advertisement

அதனைத்தொடர்ந்து மறுபக்கம் இருந்த டிம் செய்ஃபெர்ட் 31 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய டேரில் மிட்செலும் 8 ரன்களோடு நடையைக் கட்டினார். இவர்களைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த ஃபின் ஆலன் 62 பந்துகளில் 5 பவுண்டரிகள், 16 சிக்சர்கள் என 137 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்களைக் குவித்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ராவுஃப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இந்த போட்டியிலும் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இதில் சைம் அயூப் 10 ரன்களில் வெளியேற, மறுபக்கம் 24  ரன்களை எடுத்திருந்த முகமது ரிஸ்வானும் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். இதனையடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் பாபர் ஆசாம் ஒரு பக்கம் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்த, மறுமுனையில் களமிறங்கிய ஃபகர் ஸமான் 19 ரன்களிலும், அசாம் கான் 10 ரன்களிலும் இஃப்திகார் அஹ்மத் ஒரு ரன்னிலும் என நடையைக் கட்டினர்.

ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் தனது அரைசதத்தை பதிவுசெய்தார். இத்தொடரில் அவர் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும். பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 58 ரன்களில் பாபர் ஆசாமும் விக்கெட்டை இழக்க, பின்னர் வந்த முகமது நவாஸ் அதிரடியாக விளையாடி 28 ரன்களையும், கேப்டன் ஷாஹீன் அஃப்ரிடி 16 ரன்களையும் சேர்த்தனர். 

இருப்பினும் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியால் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. நியூசிலாந்து அணி தரப்பில் டிம் சௌதீ 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன்மூலம் நியூசிலாந்து அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியதுட, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News