NZ vs SL, 1st T20I: மிட்செல், பிரேஸ்வெல் அரைசதம்; இலங்கை அணிக்கு 173 ரன்கள் டார்கெட்!

Updated: Sat, Dec 28 2024 13:44 IST
Image Source: Google

இலங்கை அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி இன்று மவுண்ட் மவுங்கானுயில் உள்ள பே ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டிம் ராபின்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிம் ராபின்சன் 11 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 8 ரன்களுடன் நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மேன் 15 ரன்களுக்கும், கிளென் பிலீப்ஸ் 8 ரன்களுக்கும், மிட்செல் ஹெய் ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்களில் 5  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பின்னர் ஜோடி சேர்ந்த டேரில் மிட்செல் மற்றும் மைக்கேல் பிரேஸ்வெல் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். ஒருகட்டத்திற்கு மேல் பிரேஸ்வெல் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். மறுமுனையில் டேரில் மிட்செல் பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயரத்தொடங்கியது. இதில் அதிரடியாக விளையாடிய பிரேஸ்வெல் 28 பந்துகளிலும், டேரில் மிட்செல் 35 பந்துகளிலும் என தங்களது அரைசதங்களைப் பதிவுசெய்து அசத்தினர்.

Also Read: Funding To Save Test Cricket

இதன்மூலம் இருவரும் 105 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில் டேரில் மிட்செல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 62 ரன்களில் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 59 ரன்களை எடுத்த நிலையில் மைக்கேல் பிரேஸ்வெல்லும் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களைச் சேர்த்தது. இலங்கை அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மஹீஷ் தீக்ஷனா, பினுரா ஃபெர்னாண்டோ மற்றும் வநிந்து ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை