தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா தொடர்களிலிருந்து விலகும் டேரில் மிட்செல்!
நியூசிலாந்து அணி தற்போது தென் ஆப்பிரிக்க அணியுடனான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 13ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறவுள்ளது.
இதனைத்தொடர்ந்து நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் ஆஸ்திரேலிய அணிக்கெதிராக 3 டி20 மற்றும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரர் டேரில் மிட்ல்செல் தென் ஆப்பிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
நடைபெற்றுவரும் இத்தொடரின் முதல் போட்டியின் போது டேரில் மிட்செல் காயமடைந்துள்ளார். இதனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலிருந்து விலகுவதாகும், அதோடு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கும் தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலிருந்தும் டேரில் மிட்செல் விலகியுள்ளதாகவும் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.
மேலும் டேரில் மிட்செலிற்க்கு பதிலாக வேறு மாற்று வீரர்கள் யாரும் தேர்வுசெய்யப்படவில்லை. தற்போதுள்ள நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டேரில் மிட்செலின் விலகல் நியூசிலாந்து அணிக்கு எந்த பின்னடவையும் ஏற்படுத்தாது என எதிர்பார்க்கப்படுகிறது.