NZW vs ENGW, 3rd ODI: சோஃபி டிவைன் அசத்தல் சதம்; ஆறுதல் வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து!

Updated: Sun, Apr 07 2024 14:00 IST
Image Source: Google

இங்கிலாந்து மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5  டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20 தொடரை இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடரிலும் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியில் டாமி பியூமண்ட் 3 ரன்களிலும், மையா பௌச்சர் 19 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். பின்னர் இணைந்த கேப்டன் ஹீதர் நைட் 31 ரன்களுக்கும், நாட் ஸ்கைவர் 27 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சோஃபி டங்க்லி மற்றும் டேனியல் வையட்  ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய எமி ஜோன்ஸ் - சார்லி டீன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் எமி ஜோன்ஸ் அரைசதம் கடந்த நிலையிலும், சார்லி டீன் 38 ரன்களிலும் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வீராங்கனைகளும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் இங்கிலாந்து மகளிர் அணி 46.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

நியூசிலாந்து அணி தரப்பில் ஜெஸ் கெர் மற்றும் ஹன்னா ரோவ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து இலக்கை விரட்டிய நியூசிலாந்து மகளிர் அணியில் சோஸி பேட்ஸ் 6 ரன்களுக்கும், ஜார்ஜியா பிலிமெர் 4 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் இணைந்த அமெலியா கெர் - கேப்டன் சோஃபி டிவைன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

இதில் அமெலியா கெர் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய மேடி க்ரீனும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றியில் பங்காற்றினார். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் சோஃபி டிவைன் 11 பவுண்டரி, 4 சிக்சர்கள் என தனது சதத்தைப் பதிவுசெய்து அசத்தியதுன், அணிக்கு வெற்றியையும் தேடிக்கொடுத்தார். 

இதன்மூலம் நியூசிலாந்து மகளீர் அணி 39 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியில் சதமடித்து அசத்திய சோஃபி டிவைன் ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து வீராங்கனை எமி ஜோன்ஸ் தொடர் நாயகி விருதையும் வென்று அசத்தினர். 
 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை