ஐபிஎல் 2022: தாயின் உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் அணிக்காக விளையாடும் ராஜஸ்தான் வீரர்!
கடந்த மார்ச் 26ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கி 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றை கடந்து நாக்-அவுட் போட்டிகளையும் தாண்டியுள்ள ஐபிஎல் 2022 தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி மே 29-ஆம் தேதியான இன்று இரவு 8 மணிக்கு அகமதாபாத் நகரில் கோலாகலமாக நடைபெறுகிறது. இந்த போட்டியில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றுகளில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் புதிய அணியாக இருந்தாலும் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் சொல்லி அடித்த குஜராத் டைட்டன்ஸ் தனது முதல் வருடத்திலேயே சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.
அந்த அணியில் உள்ள ஹர்திக் பாண்டியா, ரஷீத் கான், சுப்மன் கில், டேவிட் மில்லர் போன்ற நட்சத்திர தரமான வீரர்கள் இந்த இறுதிப் போட்டியில் கடைசி முறையாக மிகச் சிறப்பாக செயல்பட்டு கோப்பையை முத்தமிட போராட உள்ளனர்.
அதேபோல் முரட்டுத்தனமான ஃபார்மில் ரன் மழை பொழிந்து வரும் ஜோஸ் பட்லர், அதிரடி காட்டக்கூடிய சஞ்சு சாம்சன், சிம்ரோன் ஹெட்மயர், டிரென்ட் போல்ட், அஸ்வின், சஹால் என தரமான வீரர்களை பலமாக கொண்டுள்ள ராஜஸ்தான் 2008க்கு பின் 13 வருடங்கள் கழித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்த பொன்னான வாய்ப்பில் 2-வது கோப்பையை வென்று சரித்திரம் படைக்க தயாராகியுள்ளது.
முன்னதாக மே 27இல் பெங்களூருவுக்கு எதிராக நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ராஜஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு ராஜஸ்தானின் துல்லியமான பந்துவீச்சில் 20 ஓவர்களில் வெறும் 157/8 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக இளம் வீரர் ரஜத் படிதார் 58 (42) ரன்கள் சேர்த்தார். அதை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜோஸ் பட்லர் தனி ஒருவனாக 10 பவுண்டரி 6 சிக்சருடன் சதமடித்து 106* (60) ரன்கள் விளாசி எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இருப்பினும் விராட் கோலி, டு பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் போன்ற நட்சத்திர வீரர்களை கூட பெரிய ரன்களை எடுக்க விடாமல் கடைசி நேரத்தில் அட்டகாசமாக பந்துவீசிய பிரசித் கிருஷ்ணா, ஓபேத் மெக்காய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை எடுத்து அறிவிக்கப்படாத ஆட்டநாயகன்களாக செயல்பட்டனர். குறிப்பாக 25 வயது மட்டும் நிரம்பியுள்ள இளம் வெஸ்ட்இண்டீஸ் வேகப்பந்துவீச்சாளர் ஓபேத் மெகாய் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட் எடுத்து 5.75 என்ற சூப்பரான எக்கனாமியில் பந்துவீசி அசத்தினார்.
முன்னதாக அப்போட்டிக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓபேத் மெக்காய் அவரின் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனாலும் கூட அந்த சோகத்தை மனதில் வைத்துக் கொண்டு பெங்களூருக்கு எதிரான முக்கிய நாக் அவுட் போட்டியில் சிறப்பாக பந்து வீசியதாக அவரை அந்த போட்டி முடிந்ததும் இலங்கையின் ஜாம்பவான் மற்றும் ராஜஸ்தான் தலைமை பயிற்சியாளர் குமார் சங்ககாரா மனதார பாராட்டினார்.
இது பற்றி பேசிய அவர் “மெக்காய்’இன் தாய் வெஸ்ட் இண்டீசில் உடல்நலக்குறைவால் தவித்து வருகிறார். அவர் அதை அனைத்தையும் சமாளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும் அதை அனைத்தையும் தாண்டி போட்டியின் மீது முழு கவனத்தையும் செலுத்தி அவர் இன்று மிகச் சிறப்பாக பந்து வீசினார்” என்று தெரிவித்தார்.
தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லாத போதிலும் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது உட்பட முடிந்த அளவுக்கு அனைத்து வகைகளிலும் உதவி செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கு ஓபேத் மெக்காய் நன்றியையும் தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு பிடித்த கிரிக்கெட் மீதிருக்கும் காதலால் தொடர்ந்து ராஜஸ்தான் அணிக்காக இன்று நடைபெறும் மாபெரும் இறுதி போட்டியில் விளையாடும் அவர் இறுதி மூச்சாக மிகச் சிறப்பாக பந்துவீசி ராஜஸ்தான் 13 வருடங்கள் கழித்து கோப்பையை வென்று கொடுக்க பாடுபட அள்ளார்.
எனவே இப்போட்டியில் வென்று வெற்றியுடன் தாய் பெருமைப் படக்கூடிய தலைமகனாக அவர் வெஸ்ட் இண்டீஸ் திரும்புவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். மேலும் அவருக்கும் அவரின் அன்னை நல்லபடியாக குணமடைய வேண்டும் என்ற ரசிகர்களின் வாழ்த்துக்களும் பிரார்த்தனையும் எப்போதும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.