IND vs NZ: பயிற்சியாளர் குறித்து சுவாரஸ்ய தகவலை பகிர்ந்து ஸ்ரேயஸ்!
இந்தியா - நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லதாம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை தொடர்ந்து இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது. இதில் முதல்வரிசை வீரர்கள் சொதப்பிய நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.
இதன் மூலம் இந்திய அணி 284 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,‘ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகக்கூடியவர் தோனி. பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தினால் எல்லா விஷயங்களும் தானாக நடக்கும் என்று அவர் கூறினார். இதை அப்படியே நான் கடைபிடித்து வருகிறேன்.
மேலும் என்னுடைய இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் எனது பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்காத வரை எனது வீட்டிற்கு சாப்பிட வர மாட்டேன் எனக் கூறிவிட்டார். இப்போது என் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி உள்ளேன். அதனால் என் வீட்டிற்கு அவர் வருவார் என்று நம்புகிறேன்’ என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.