எல்எல்சி 2022: கெவின் ஓ பிரையன் அதிரடி சதம்; குஜராத் ஜெயண்ட்ஸ் த்ரில் வெற்றி!

Updated: Sun, Sep 18 2022 07:50 IST
O'Brien steals Nurse's thunder in match of big-hitters as Gujarat Giants win their first match (Image Source: Google)

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி ஓய்வுபெற்ற முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு விளையாடும் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்துவருகிறது.

இன்றைய போட்டியில் வீரேந்திர சேவாக் தலைமையிலான குஜராத் ஜெயிண்ட்ஸ் மற்றும் ஜாக் காலிஸ் தலைமையிலான இந்தியா கேபிடள்ஸ் அணிகளும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் ஜெயிண்ட்ஸ் கேப்டன் சேவாக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா கேபிடள்ஸ் அணியின் ஆஷ்லி நர்ஸ் அதிரடியாக பேட்டிங் செய்து சதமடித்தார்.  அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸருமாக விளாசிய ஆஷ்லி நர்ஸ், 43 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 103 ரன்களை குவித்தார். 

அவரைத்தவிர வேறு எந்த வீரருமே சரியாக ஆடவில்லை. ஆனாலும் ஆஷ்லி நர்ஸின் சதத்தால் 20 ஓவரில் 179 ரன்களை குவித்த இந்தியா கேபிடள்ஸ் அணி, 180 ரன்கள் என்ற கடின இலக்கை குஜராத் ஜெயிண்ட்ஸ் அணிக்கு நிர்ணயித்தது.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் அணியில் கேப்டன் வீரேந்திர சேவாக், பார்த்தீவ் படேல், யாஷ்பால் சிங், திசாரா பெரெரா, சிக்கும்புரா என அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

ஆனாலும் மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய கெவின் ஓ பிரையன் பவுண்டரியும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட அணியின் ஸ்கோரை உயர்த்திவந்தார். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கெவின் ஓ பிரைன் 56 பந்துகளில் சதமடித்து மிரட்டினார்.

பின்னர் 61 பந்துகளில் 15 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 106 ரன்களைச் சேர்த்த கெவின் ஓ பிரையன் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனாலும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 18.4 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை