ஒருநாள் போட்டிகள் குறித்து வைரலாகும் அஸ்வினின் கருத்து!

Updated: Thu, Jul 14 2022 11:49 IST
Image Source: Google

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. தற்போது ஒரு நாள் போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை . இதனால் அஸ்வின் தொலைக்காட்சியை ஆஃப் செய்து விடுவதாக இப்படி ஓப்பனாக கூறிவிட்டாரே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் காரணம் அதுவல்ல.

கடந்த 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரு நாள் போட்டிகளில் இரண்டு பந்துகளை பயன்படுத்தும் விதியை ஐசிசி கொண்டு வந்தது. ஒரு முனைக்கு ஒரு புதிய பந்து என நடைமுறைப்படுத்தும் இந்த சூழல் பந்து வீச்சாளர்களுக்கு பேரிடியை தந்தது. இரண்டு முனையிலும் புது பந்து என்றால் பந்து நன்றாக ஸ்விங் ஆகும் என பந்துவீச்சாளர்கள் நினைத்தனர் .ஆனால் அது தலைகீழாக மாறி பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதற்கு சாதகமாக மாறிவிட்டது.

இது குறித்து தான் தற்போது அஸ்வின் பேசியுள்ளார் . ஒருநாள் போட்டிகளை தற்போது பார்ப்பதே போரடிப்பதாக குறிப்பிட்டுள்ள அஸ்வின், பேட்டுக்கும், பந்துக்கும் சரிசமமான வாய்ப்பு ஒரு நாள் போட்டிகளில் இருப்பதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். டி20 கிரிக்கெட்டின் நீண்ட வெர்சனாக ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் இருப்பதாக அஸ்வின் குறை கூறியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் பழைய முறைப்படி 50 ஓவருக்கும் ஒரே பந்தை பயன்படுத்தினால் மட்டுமே மீண்டும் ரசிகர்களின் ஆர்வத்தை அது ஈர்க்கும் என்று அஸ்வின் குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் சுழற் பந்துவீச்சு, ரிவர்ஸ் ஸ்விங் போன்ற ஏதும் தற்போது கை கொடுப்பதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் இஷ்டத்துக்கு ரன் குவித்து வருகிறார்கள் . 350 ரன்கள் அடிக்கப்பட்டாலும் அதனை 47 வது ஓவரிலே எதிரணி வெற்றிகரமாக துரத்தி விடுவதாக அஸ்வின் கூறியுள்ளார்.

இதனால் பார்க்கும் பார்வையாளர்களுக்கும் ஒரு விதமான சலிப்பை தருவதாக வேதனை தெரிவித்துள்ள அஸ்வின் ஒருநாள் கிரிக்கெட் அழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட்டின் மகிமையே 60 பந்துகளுக்கு 60 ரன்கள் அடிக்க வேண்டும் . கையில் 7 விக்கெட் தான் இருக்கிறது என்றால் ரிவர்ஸ் ஸ்விங் உள்ளிட்ட வித்தைகள் மூலம் பந்துவீச்சாளர்கள் அணிக்கு வெற்றியை தேடி தருவார்கள். ஆனால் இப்போதெல்லாம் அப்படி நடைபெற வாய்ப்பே இல்லை என்று அஸ்வின் குற்றச்சாட்டு உள்ளார்.

ஒரு நாள் போட்டியில் பேட்ஸ்மேன்கள் கடைசி வரை சென்று, பின்னர் ரன் சேர்ந்து இன்னிங்சை கட்டமைப்பதும், அப்போது பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுகளை எடுப்பதும் என்று இருந்தால்தான் அது நல்லது என்று அஸ்வின் கூறியுள்ளார். இதனால் ஐசிசி விரைந்து நடவடிக்கை எடுத்து 50 ஓவருக்கும் ஒரே பந்தை பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை