வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை!

Updated: Fri, Dec 08 2023 11:25 IST
வார்னர் vs ஜான்சன் - சர்ச்சைக்கு முடிவுகட்ட ரிக்கி பாண்டிங் ஆலோசனை! (Image Source: Google)

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்குகிறது. வரும் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை அங்கமாக நடைபெறும் இத்தொடருடன் நட்சத்திர தொடக்க வீரர் டேவிட் வார்னர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இருப்பினும் 2018ஆம் ஆண்டு பந்து சேதப்படுத்தப்பட்ட வழக்கில் நாட்டுக்கு மிகப்பெரிய அவப்பெயரை வாங்கிக் கொடுத்த டேவிட் வார்னர் இப்படி ஹீரோவை போல விடை பெறுவதற்கு அனுமதி கொடுத்தது ஏன் என்று ஆஸ்திரேலிய வாரியத்தை முன்னாள் வீரர் மிட்சேல் ஜான்சன் கடுமையாக விமர்சித்தார். ஆனால் அதற்கு உஸ்மான் கவாஜா முதல் மைக்கேல் கிளார்க் வரை நிறைய முன்னாள் இந்நாள் ஆஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஆஷஸ் தொடரில் டேவிட் வார்னர் தேர்வு செய்யப்பட்ட போது மனக்கசப்பு ஏற்பட்டதாலயே மிட்சேல் ஜான்சன் இப்படி பேசியிருக்கலாம் என்று முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எனவே இருவரையும் ஒன்றாக ஒரே அறையில் அமர வைத்து சமரசம் பேசினால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர, “இறுதியில் இந்த இருவருக்கு மத்தியில் நான் வரவேண்டும். அவர்களுக்கு மத்தியில் நான் நடுவராக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். அந்த நிகழ்வை ஊடகங்களில் ஒளிபரப்புவதற்கு பதிலாக அவர்களை ஒரு அறையில் அழைத்துச் சென்று பேச விரும்புகிறேன். ஏனெனில் இருவரும் தற்போது சற்று நெருப்பான வேகத்தில் இருக்கிறார்கள். 

என்னைப் பொறுத்த வரை இந்த பிரச்சினை கடந்த 6 முதல் 8 மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஆஷஸ் தொடரில் வார்னர் தேர்வு செய்யப்பட்டது சம்பந்தமாக உருவாகியிருக்கலாம் என்று கருதுகிறேன். நேரடியாக இருவரும் உட்கார்ந்து பேசாததாலேயே இந்த பிரச்சனை நீடிப்பதாக தோன்றுகிறது. எனவே அவர்கள் உரையாடல் நிகழ்த்துவதை பார்க்க நான் சாட்சியாக இருக்க வேண்டும்

“மேலும் வார்னர் தம்முடைய கடைசி போட்டி வழியனுப்பும் போட்டியாக இருக்கும் என்று சொல்லவில்லை. மாறாக பெர்த் நகரில் நடைபெறும் போட்டியில் சில ரன்கள் அடித்து தம்முடைய கேரியரை சிட்னியில் முடிப்பதற்கு அவர் விரும்புகிறார்” என்று கூறியுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை