பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை ஒத்திவைத்தது பிசிபி!
பிஎஸ்எல் என்றழைக்கப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 10ஆவது சீசன் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையேயான போட்டி ராவல்பிண்டி மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் மைதான வளாகத்திற்குள் ஒரு ட்ரோன் விழுந்ததை அடுத்து அவசரக் கூட்டம் நடைபெற்றது, அதைத் தொடர்ந்து போட்டியை மீண்டும் திட்டமிட முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக, பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் மீதமுள்ள 8 போட்டிகளை மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்றிருந்த பல வெளிநாட்டு வீரர்கள் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்குச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ராவல்பிண்டி, முல்தான் மற்றும் லாகூரில் நடைபெற இருந்த மற்ற அனைத்து போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தான் இத்தொடரின் எஞ்சிய போட்டிக்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இருப்பினும் எஞ்சியுள்ள போட்டிகளுக்கான தேதி மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பிசிபி தரப்பில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு மறுத்துள்ளதாக தகவல் வெளியாயுள்ளது. முன்னதாக கடந்த 2016, 2017 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரானது பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.
இதன் காரணமாகவே தற்போதும் பிஎஸ்எல் தொடரின் எஞ்சிய போட்டிகளை யுஏஇ-யில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்துடன் ஒரு உடன்பாட்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எட்டத் தவறியதன் கரணமாக பாகிஸ்தன் சூப்பர் லீக் தொடரை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக பிஎஸ்எல் தொடரும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Also Read: LIVE Cricket Score
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் வெளியான அறிக்கையில், “பாகிஸ்தான் பிரதமர் மியான் முகமது ஷாபாஸ் ஷெரீப்பின் ஆலோசனையின் பேரில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஒத்திவைக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது. இதனால் பாகிஸ்தான் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகள் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.