On This Day: இந்திய அணியின் நாயகன் தோனி ஓய்வை அறிவித்து மூன்றாண்டுகள் நிறைவு!
இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் முதன்மையானவராக எம் எஸ் தோனி பார்க்கப்பட்டு வருகிறார். இவரது தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை என ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று அசத்தியது. பின் தோனி கேப்டன்சிப்பிலிருந்து வெளியேறிய பிறகு இந்திய அணி விளையாடிய 2 ஒருநாள் உலகக்கோப்பை தொடரிலும் அரையிறுதிச்சுற்றோடு வெளியேறியது.
அதிலும் குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி மிகச்சிறப்பாக செயல்பட்ட பட்சத்திலும், அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி கோப்பை வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார். மேலும் அதுதான் மகேந்திர சிங் தோனியின் கடைசி சர்வதேச போட்டியாகவும் அமைந்தது. அதன்பின் அவர் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாலம், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிகாக மட்டும் விளையாடிவருகிறார்.
அப்போதுதான் கடந்த 2020ஆம் ஆண்டு இதே நாள், இரவு 7 மணி போல் அந்த அதிர்ச்சி செய்தி தோனியிடம் இருந்து வந்தது. இன்ஸ்டாகிராமில் தோனி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் என்னுடைய நன்றிகள். 7: 29 மணியிலிருந்து நான் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன் என்று கூலாக கூறி விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் தோனி ஓய்வு பெற்று மூன்று ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்திய கிரிக்கெட்டில் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன தோனி இல்லாமல் நாம் தவறவிட்டது என்ன என்பதை தற்போது பார்க்கலாம். தோனிக்குப் பிறகு இந்திய அணியில் குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில் நிலையான விக்கெட் கீப்பர் இன்றுவரை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை.
டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பந்த், ஒரு நாள் கிரிக்கெட்டில் தடுமாறியதால் இந்திய அணிக்கு சரியாக ஒரு விக்கெட் கீப்பர் கூட கிடைக்கவில்லை. இதனால் கே எல் ராகுலை வைத்து விக்கெட் கீப்பிங் செய்யும் பரிதாபமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. தோனி சென்ற பிறகு ரிஷப் பந்த், இஷான் கிஷன், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் போன்ற விக்கெட் கீப்பர்களை இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் பயன்படுத்தியது.
இதேபோன்று இந்தியாவில் நடுவரிசை மற்றும் பினிஷருக்கு தோனியை போல் இன்னும் தகுதியான ஆள் கிடைக்கவில்லை. இதனால் ஆல் ரவுண்டான ஹர்திக் பாண்டியாவை பேட்டிங்கில் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. ஆண்டு மூன்றுகள் ஆகியும் தோனியிடத்தை நிரப்ப முடியாமல் இந்திய அணி தடுமாறி வருகிறது. அணியில் கேப்டனாக இல்லாமல் சாதாரண வீரராக இருந்த தோனி பந்துவீச்சாளர்களுக்கும் கேப்டன்களுக்கும் தன்னுடைய அறிவுரையை வழங்கி வந்தார்.
இதனால் தோனியின் அனுபவம் கோலி போன்ற கேப்டன்களுக்கு பக்க பலமாக இருந்தது. தோனியின் அறிவுரையை பின்பற்றி சாஹல், குல்தீப் யாதவ் போன்ற வீரர்கள் சிறந்த வீரர்களாக வலம் வந்தனர். ஆனால் தோனி சென்ற பிறகு அந்த அனுபவத்தையும் வழிகாட்டுதலையும் இந்திய அணி இழந்து விட்டது என்பதே நிதர்சனமான உண்மை.