பாராட்டுகள் அனைத்தும் பந்து வீச்சாளர்களையே சாரும் - ஆஷ்லே கார்ட்னர்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்று நடந்த 12ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்களை மட்டுமே எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக கனிகா அஹுஜா 33 ரன்களையும், ராக்வி பிஸ்ட் 22 ரன்களையும் சேர்த்தனர். குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் டியான்டிரா டோட்டி மற்றும் தனுஜா கன்வர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் ஜெயண்ட்ஸ் அணியில் ஹேமலதா 11 ரன்னிலும் பெத் மூனி 17 ரன்னிலும், ஹர்லீன் தியோல் 5 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.
அதன்பின் இணைந்த ஆஷ்லே கார்ட்னர் - போப் லிட்ச்ஃபீல்ட் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் லிட்ச்ஃபீல்ட் 30 ரன்களில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆஷ்லே கார்ட்னர் 6 பவுண்டரி, 3 சிக்ஸர்களுடன் 58 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இந்நிலையில் இப்போட்டியில் வெற்றி குறித்து பேசிய ஆஷ்லே கார்ட்னர், “நாங்கள் கடைசி இரண்டு ஆட்டங்களில் விரும்பியபடி பேட்டிங் செய்யவில்லை, ஆனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதற்கான பாராட்டுகள் அனைத்தும் பந்து வீச்சாளர்களையே சாரும். இதில் எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதுடன், எதிரணியை குறைந்த ரன்களில் சுருட்டியதுடன், பேட்டிங் செய்வதற்கு எங்களுக்கு எளிதான பாதையையும் அமைத்துக் கொடுத்தனர்.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் இந்த அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் நாங்கள் வென்றிருக்க வேண்டும், ஆனால் அந்து எங்களால் 200 ரன்களை பாதுகாக்க முடியவில்லை, ஆனால் இன்றைய வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. ஆட்டத்தில் வெற்றி பெற்று நேர்மறையை முன்னோக்கி எடுத்துச் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. தற்போது நடைபெறும் போட்டிகளில் பனியின் தாக்கம் அதிகம் இல்லாதது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.