கேகேஆரை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் அடுத்த இலக்கு - கௌதம் கம்பீர்!

Updated: Wed, May 29 2024 20:31 IST
கேகேஆரை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் அடுத்த இலக்கு - கௌதம் கம்பீர்! (Image Source: Google)

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ள ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 8 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், மூன்றாவது முறையாக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற மூன்றாவது அணி எனும் பெருமையை தக்கவைத்துள்ளது. 

முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று ஐபிஎல் தொடரின் ஆதிக்கமிக்க அணிகளாக திகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஐபிஎல்லில் கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த நோக்கம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள அவர், “மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. நாங்கள் அவர்களை விட இரண்டு கோப்பைகளை குறைவாகவே வென்று இருக்கிறோம். நடப்பு சீசனில் கோப்பையை வென்றால் நான் திருப்தியாக இருக்கிறேன், ஆனால் நாங்கள் இன்னும் வெற்றிகரமான ஐபிஎல் அணியாக இல்லை. அதைச்செய்ய, நாங்கள் இன்னும் மூன்று முறை சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும், அதற்கான முயற்சியில் நாங்கள் இறங்கியுள்ளோம். 

 

ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியை வெற்றிகரமான அணியாக மாற்றுவதுதான் எங்களின் அடுத்த இலக்கு. அதைவிட சிறந்த உணர்வு இருக்காது. ஆனால், அதை நோக்கிய பயணம் இப்போதுதான் தொடங்கியுள்ளது. நீங்கள் ஐபிஎல் தொடரை எதிர்கொள்ளும் போது, ​​உங்கள் முதல் எண்ணம் பிளே ஆஃப் சுற்றை அடைவதுதான். நீங்கள் பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சமயத்தில், புள்ளிப்பட்டியளின் முதல் இரு இடங்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

அதன்படி நீங்கள் முதல் இரண்டு இடங்களை அடையும் போது, ​​அடுத்ததாக இறுதிப் போட்டிக்கு செல்ல விரும்புகிறீர்கள், பின்னர் நீங்கள் வெற்றி பெற விரும்புகிறீர்கள். ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடைய உற்சாகமும், சவால்களும், பதட்டமும் அதிகமாக இருக்கும். அப்படி ஒரு தொடரில் நீங்கள் சாம்பியன் பட்டம் வென்றால் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக உணர ஆரம்பிக்கிறீர்கள். அதன் காரணமாக நாங்கள் இதனை தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை