உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி கடந்த இரண்டு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பழி தீர்த்துக் கொண்டது.

Advertisement

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு துவக்கத்திலிருந்தே ரன்மழை பொழிந்தது. குறிப்பாக விக்கெட் இழப்பின்றி அந்த அணி 100 ரன்களை கடந்த வேளையில் முதல் விக்கெட்டாக 21.4-ஆவது ஓவரில் அணியின் எண்ணிக்கை 125ஆக இருந்தபோது பதும் நிஷங்கா 61 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Advertisement

அதன் பின்னர் 26.2-ஓவரில் அணியின் எண்ணிக்கை 157-ஆக இருந்தபோது 78 ரன்கள் எடுத்திருந்த குசால் பெரேரா இரண்டாவது விக்கெட்டாக ஆட்டமிழந்து வெளியேறினார். இப்படி 157 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த நிலையில் நிச்சயம் இலங்கை அணி 300 ரன்களை அடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் அடுத்த 52 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை அந்த அணி இழந்து பரிதாப நிலையை சந்தித்தது.

இறுதியில் இலங்கை அணியானது 43.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்களை மட்டுமே குவித்தது. இலங்கை அணி சார்பாக 8 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 215 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்சல் மார்ஷ் மற்றும் விக்கெட் கீப்பர் ஜாஸ் இங்கிலீஷ் ஆகியோர் அரைசதமும், மார்னஸ் லாபுஷேன் 40 ரன்கள் குவித்து அசத்தினர். 

பின்னர் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ், “கடந்த இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி சந்தித்தது குறித்து நாங்கள் எதுவும் பேச விரும்பவில்லை. இன்றைய போட்டியில் எங்களது அணியின் வீரர்கள் பீல்டிங்கின் போது சிறப்பாக செயல்பட்டனர். இலங்கை அணி நன்றாகவே இந்த இன்னிங்சை தொடங்கியது. ஆனாலும் மிடில் ஓவர்களில் நாங்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி மீண்டும் ஆட்டத்திற்குள் வந்தோம். எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசியதால் எங்களால் அவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. 

இந்த போட்டியில் 300 ரன்கள் வரை அவர்கள் குவிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் பந்து வீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு காரணமாக அவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது. இந்த போட்டியினை பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். மைதானத்தில் இருந்த ரசிகர்களின் சத்தம் எங்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. இன்றைய போட்டியில் நாங்கள் அனைத்து விதமான துறைகளிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன். இதனை அப்படியே கொண்டு சென்று இனியும் வெற்றிகளை பெறுவோம்” என தெரிவித்துள்ளார். 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News