இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் நியமனம்!
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் - நவம்பரில் நடக்கவுள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. இந்திய அணி ரோஹித் சர்மா தலைமையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில் தீவிரமாக தயாராகிவருகிறது.
கடந்த முறை விட்ட டி20 உலக கோப்பையை இந்த முறை தூக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது இந்திய அணி. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் 3 விதமான ஃபார்மட்டிலும் ஆடுவதால் பணிச்சுமை அதிகமாக இருப்பதால், மன வலிமை மிக முக்கியம்.
அந்தவகையில், இந்திய வீரர்களின் மனவளத்தை பராமரித்து மேம்படுத்தும் வகையில் பாடி அப்டான் மனவள பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தோனி கேப்டன்சியில் இந்திய அணி 2011இல் ஒருநாள் உலக கோப்பையை வென்றபோது, பாடி அப்டான் தான் மனவள பயிற்சியாளராக இருந்தார். வீரர்களின் மனநிலையையும் மனவலிமையையும் பராமரிப்பதில் கைதேர்ந்தவர் அவர்.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் நண்பரும் கூட. ராகுல் டிராவிட்டும் பாடி அப்டானும் ஐபிஎல்லில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளில் பணியாற்றியுள்ளனர்.
அந்தவகையில், பாடி அப்டானின் திறனை அறிந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக பாடி அப்டானை அழைத்து அணியில் சேர்த்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் தொடரிலேயே பாடி அப்டான் இந்திய அணியுடன் இணைகிறார். டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியின் மனவள பயிற்சியாளராக பாடி அப்டான் செயல்படவுள்ளார்.