டி20 உலகக்கோப்பை: முழு உடற்தகுதியுடன் அணியில் இணையும் ஷாஹின் அஃப்ரிடி!

Updated: Wed, Oct 12 2022 13:28 IST
Image Source: Google

முழங்கால் காயத்தினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பேட்டர் ஃபகர் ஜமானும் உடல் தகுதி பெற்று விட்டார். ஷாஹின் ஷா அஃப்ரீடி முழங்கால் காயம் அடைந்து சிகிச்சை பெற்று லண்டனில் புனர் சிகிச்சையில் இருந்தார். இப்போது உடல்தகுதி பெற்றுவிட்டபடியால் அக்டோபர் 17ஆம் தேதி இங்கிலாந்துக்கு எதிரான பயிற்சி டி20 ஆட்டத்திலும் அக்டோபர் 19ஆம் தேதி ஆஃப்கான் அணிக்கு எதிரான டி20 ஆட்டத்திலும் ஷாஹின் அஃப்ரீடி ஆடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஷாஹின் அஃப்ரீடி, “கடந்த 10 நாட்களாக என்னால் 6 முதல் 8 ஓவர்கள் வரை சிக்கலின்றி வீச முடிந்தது. அதுவும் முழு ரன் - அப் மற்றும் வேகத்துடன் வீச முடிந்தது. அணியுடன் இல்லாமல் இருந்த நாட்களை வெறுமையாக உணர்ந்தேன். வலையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கை மகிழ்ச்சியுடன் செய்தாலும் உண்மையான மேட்ச் சூழ்நிலை என்பது உற்சாகமானது” என்றார்.

அதேபோல் இடது கை பேட்டர் ஃபக்கர் ஜமான் முழங்கால் காயத்திலிருந்து முழு குணமடைந்து அவரும் அணியுடன் இணையவிருக்கிறார். ஆனால், இவர் கூடுதல் வீரர்கள் பட்டியலில்தான் இருக்கிறார். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 7 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் 4-3 என்று இழந்ததற்கு ஷாஹின் அஃப்ரீடி இல்லாத குறைதான் காரணம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.

கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி இந்திய டாப் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுவும் ரோகித் சர்மாவை வந்தவுடனேயே ஒரு கர்வ் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். கேஎல் ராகுலுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆக்கி உள்ளே கொண்டு வர, பந்து வரும் திசைக்கு எதிராக ராகுல் ஆடப்போய் தொடையில் பட்டு ஸ்டம்பில் பட்டு பவுல்டு ஆனார். விராட் கோலி அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்தார், அவரையும் ஷாஹின் அஃப்ரீடிதான் வீழ்த்தினார்.

கடைசியில் இந்திய அணி 151/7 என்று முடிய பாகிஸ்தான் அணி விக்கெட் எதையும் இழக்காமல் பாபர் அசாம், ரிஸ்வானின் உடைக்க முடியாத 152 ரன் துவக்கக் கூட்டணியில் இந்தியாவை வீழ்த்தியது. அதன் பிறகு ஆசியக் கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி ஆடவில்லை. இப்போது ஆஸ்திரேலியாவின் பவுன்ஸ், வேகப் பிட்சுக்கு ஷாஹின் அஃப்ரீடி வந்துள்ளார். இதனையடுத்து இந்தியா-பாகிஸ்தான் மேட்ச் களைக்கட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை