தன்மீதான விமர்சனங்களுக்கு இமாம் உல் ஹக் பதிலடி!

Updated: Thu, Mar 10 2022 21:25 IST
PAK v AUS: Imam-Ul-Haq Puts Away Rawalpindi Wicket's Criticism, Says 'It Was Same For Both Teams' (Image Source: Google)

பாகிஸ்தான்  - ஆஸ்திரேலியா இடையே ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 5 நாட்கள் ஆட்டத்தில் மொத்தமாகவே 14 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்தது. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 476 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 459 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்ஸே கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செசனில் தான் முடிந்தது. அதன்பின்னர் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் இமாம் உல் ஹக் மற்றும் அப்துல்லா ஷாஃபிக் ஆகிய இருவருமே 77 ஓவர்கள் பேட்டிங் ஆடி முடித்தனர். இதையடுத்து போட்டி டிராவில் முடிந்தது.

ஓராண்டுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட வாய்ப்பு பெற்ற பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக், அபாரமாக பேட்டிங் ஆடி 2 இன்னிங்ஸ்களிலும் சதமடித்தார். முதல் இன்னிங்ஸில் 157 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 111* ரன்களும் அடித்து அசத்தினார். 

இமாம் உல் ஹக் சிறப்பாகவே விளையாடியிருந்தாலும், ராவல்பிண்டி பிட்ச் படுமோசமான பிட்ச் என்ற விமர்சனம், இமாம் உல் ஹக்கின் அபாரமான பேட்டிங்கை நீர்த்துப்போக செய்ததுடன், அவரது பேட்டிங்கிற்கு கிடைக்க வேண்டிய கிரெடிட்டையும் மழுங்கடித்தது. எதுவுமே இல்லாத மோசமான பிட்ச்சில்தான் அடித்தார் என்ற விமர்சனம் எழுந்தது.

2 இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடி சதமடித்தபோதிலும், ஒரு கூட்டம் தன்னை விமர்சிக்க, பொங்கியெழுந்த இமாம் உல் ஹக் பதிலடி கொடுத்துள்ளார்.

தன் மீதான விமர்சனம் குறித்து பேசிய இமாம் உல் ஹக், “யாருமே டிராவை விரும்பமாட்டார்கள். பிட்ச்சை தயார் செய்பவர்கள் எனது உத்தரவின்பேரில் தயார் செய்யவில்லை; அவர்கள் எனது உறவினர்களும் இல்லை. நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு சென்றால், எங்களது ஆலோசனையின்படி கிரிக்கெட் ஆஸ்திரேலியா பிட்ச்சை தயார் செய்வதில்லை. ஒவ்வொரு அணியும் அவரவர்க்கு சாதகமான பிட்ச்களையே அவரவர் நாட்டில் தயார் செய்வார்கள். எந்த மாதிரியான பிட்ச் என்பது விஷயமல்ல; நன்றாக ஆடுவது மட்டுமே என் வேலை. 

என்னை எப்போதுமே தான் விமர்சிக்கிறார்கள். அணியில் இருந்தாலும் விமர்சிக்கிறார்கள்; இல்லையென்றாலும் விமர்சிக்கிறார்கள். எனவே எனக்கு விமர்சனங்களை பற்றியெல்லாம் கவலையில்லை. என் பொறுப்பு நன்றாக ஆடுவது மட்டும் தான். நான் அடித்த ரன்கள் தரமானவையா, அவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளலாமா என்பது குறித்தெல்லாம் என் அணி நிர்வாகம் முடிவு செய்துகொள்ளும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை