PAK vs AUS, 2nd ODI: பாபர், இமாம் சதம்; ஆஸியை பந்தாடியது பாகிஸ்தான்!
பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி லாகூரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 348 ரன்கள் குவித்தது. பென் மெக்டர்மாட் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். அவர் 104 ரன்கள் எடுத்து அவுட்டானார். டிராவிஸ் ஹெட் 89 ரன்னும், மார்னஸ் லபுஷாக்னே 59 ரன்னும் எடுத்தனர்.
பாகிஸ்தான் சார்பில் ஷஹின் அப்ரிடி 4 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி பாகிஸ்தான் ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி சதமடித்தனர்.
இதில் இமாம் உல் ஹக் 106 ரன்னிலும், பாபர் அசாம் 114 ரன்னிலும் அவுட்டாகினர். பஹர் சமான் 67 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், பாகிஸ்தான் 49 ஓவரிலேயே 4 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் அணி 1-1 என்ற சமன் செய்துள்ளது.