PAK vs ENG, 1st Test: வெற்றிக்காக போராடும் சகீல், ரிஸ்வான்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பையை வென்ற இங்கிலாந்து அடுத்ததாக பாகிஸ்தானுக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக பாகிஸ்தான் மண்ணில் 17 வருடங்கள் கழித்து ஒரு டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து டிசம்பர் 1ஆம் தேதியன்று தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
ஆனால் வழக்கத்திற்கு மாறாக இது டெஸ்ட் போட்டி என்பதை மறக்கும் அளவுக்கு முதல் ஓவரிலிருந்தே அதிரடியாக பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சு கூட்டணியை கொண்ட பாகிஸ்தான் பவுலர்களை லோக்கல் பவுலர்களை போல் சரமாரியாக வெளுத்து வாங்கினார்கள். இதனால் முதல் இன்னிங்ஸில் 657 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஜாஹிட் முஹம்மது 4 விக்கெட்களையும் நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
அதை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம்-உல்-ஹக், பாபர் ஆசாம் ஆகியோர் சதமடித்ததன் மூலம், 579 ரன்களை மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் வில் ஜேக்ஸ் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து 78 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணியில் ஹாரி ப்ரூக் இந்த இன்னிஸிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 73 ரன்களில் ஜோ ரூட் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார்.
மறுமுனையில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஹாரி ப்ரூக் 87 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் 264 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து அணி டிக்ளர் செய்வதாக அறிவித்தது. இதில் பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா,முகமது அலி, ஸாஹித் மஹ்மூத் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
அதன்பின் 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியளிக்கும் வகையில் அப்துல்லா ஷஃபிக் 6 ரன்னிலும், அசார் அலி ரன் ஏதுமின்றியும், பாபர் ஆசாம் 4 ரன்களிலும் ஆட்டம்மிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - சௌத் சகீல் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதனால் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்களை எடுத்தது. இதையடுத்து இன்று ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இமாம் உல் ஹக் 43 ரன்களுடனும், சௌத் சகீல் 24 ரன்களுடனும் விளையாடினர்.
இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 48 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த சௌத் சகீல் - முகமது ரிஸ்வான் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்தனர். இதில் ஒரு கட்டத்திற்கு மேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஸ்வான் மளமளவென ஸ்கோரை உயர்த்தினார்.
இதற்கிடையில் சௌத் சகீப் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். இதன்மூலம் ஐந்தாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் சௌத் சகீல் 63 ரன்களோடும், முகமது ரிஸ்வான் 42 ரன்களோடும் களத்தில் உள்ளனர்.
மேலும் பாகிஸ்தான் அணி இப்போட்டியில் வெற்றிபெற 174 ரன்களும், இங்கிலாந்து அணி வெற்றிபெற 7 விக்கெட்டும் தேவை என்பதால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.