PAK vs ENG, 1st Test: 657 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்; முதல் இன்னிங்சை தொடங்கியது பாக்!
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. முதல் போட்டி ராவல்பிண்டியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜாக் கிரௌலி மற்றும் பென் டக்கெட் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே அடித்து ஆடி வேகமாக ஸ்கோர் செய்தனர். அதிரடியாக பேட்டிங் ஆடிய இருவருமே சதமடிக்க, முதல் விக்கெட்டுக்கு வெறும் 35.4 ஓவரில் 233 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி. பென் டக்கெட் 107 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஜாக் கிரௌலி 122 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர் 3ஆம் வரிசையில் இறங்கிய ஒல்லி போப்பும் அபாரமாக பேட்டிங் செய்தால். ஆனால் சீனியர் வீரர் ஜோ ரூட் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ஒல்லி போப் மற்றும் 5ஆம் வரிசையில் இறங்கிய ஹாரி ப்ரூக் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் விளையாடி சதமடிக்க, முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 506 ரன்களை குவித்து சாதனை படைத்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் நாளில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மேலும் முதல் நாளில் 4 வீரர்கள் சதமடித்ததும் இதுவே முதல்முறையாகும்.
அதன்பின் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஒல்லி ஒல்லி போப் 108 ரன்களும், ஹாரி ப்ரூக் 153 ரன்களும் குவித்தனர். லிவிங்ஸ்டோன் 9 ரன் மட்டுமே அடித்தார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடித்தார். வில் ஜாக்ஸ் 30 ரன்களும், ஒல்லி ராபின்சன் 37 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் 657 ரன்களை குவித்தது இங்கிலாந்து அணி.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஸாஹித் மஹ்மூத் 4 விக்கெட்டுகளையும், நசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். அவர்களைத் தவிர முகமது அலி 2 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் ராவுஃப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள பாகிஸ்தான் அணிக்கு அப்துல்லா ஷஃபிக் - இமாம் உல் ஹக் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கி விளையாடி வருகின்றனர். இதில் இரண்டாம் நாள் உணவு இடைவேளையின் போது பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களைச் சேர்த்து விளையாடி வருகிறது.