PAK vs ENG, 2nd Test: அறிமுக போட்டியில் அசத்தும் அப்ரார் அகமது; தடுமாறும் இங்கிலாந்து!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டியில் நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றால் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இன்றைய போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் நசீம் ஷா, அஷார் அலி, ஹாரிஸ் ராவூஃப் ஆகியோருக்கு பதிலாக முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரஃப், அப்ரார் அஹ்மத் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான்: அப்துல்லா ஷபீக், இமாம்-உல்-ஹக், பாபர் அசாம்(கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், சவுத் ஷகீல், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஜாஹித் மஹ்மூத், முகமது அலி, அப்ரார் அகமது
இங்கிலாந்து: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ்(கே), வில் ஜாக்ஸ், ஒல்லி ராபின்சன், ஜாக் லீச், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.
அதன்படி இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு ஸாக் கிரௌலி - பென் டக்கெட் இணை தொடக்கம் தந்தனர். இதில் ஸாக் கிரௌலி 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் ஜோடி சேர்ந்த டக்கெட் - ஒல்லி போப் இணை பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதில் இருவரும் அரைசதம் கடக்க அணியின் ஸ்கோரும் உயர்ந்தது. அதன்பின் 63 ரன்கலில் டக்கெட்டும், 60 ரன்களில் போப்பும் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஜோ ரூட், ஹாரி ப்ரூக் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களோடு பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.
இதனால் முதல்நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாகவே இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது. அதிலும் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக டெஸ்ட்டில் பங்கேற்றுள்ள அப்ரார் அகமது இந்த ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.