PAK vs NZ, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்!

Updated: Sat, Apr 27 2024 23:38 IST
PAK vs NZ, 5th T20I: பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி தொடரை சமன்செய்தது பாகிஸ்தான்! (Image Source: Google)

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் முதல் போட்டி மழை காரணமாக தடைபட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணியும், மூன்று மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் நியூசிலாந்து அணியும் வெற்றிபெற்று 2-1 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று லாகூரில் உள்ள கடாஃபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. 

இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு சைம் அயூப் - கேப்டன் பாபர் ஆசாம் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் சைம் அயூப் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாபர் ஆசாமுடன் இணைந்த உஸ்மான் கான் சிறப்பனா ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இப்போட்டியில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் ஆசாம் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதேசமயம் மறுபக்கம் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் கான் விக்கெட்டை இழந்தார். 

அவரைத்தொடர்ந்து அரைசதம் கடந்து விளையாடி வந்த பாபர் ஆசாமும் 6 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 69  ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். அதனைத்தொடர்ந்து நான்காவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ஃபகர் ஸமான் ஒருமுனையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். ஆனால் மறுபக்கம் அதிரடி வீரர் இஃப்திகார் அஹ்மத் 6 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஷதாப் கான் களமிறங்கியது முதலே அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். 

அதேசமயம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஃபகர் ஸமான் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 43 ரன்களை எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷதாப் கான் 15 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து அணி தரப்பில் ஸகாரி ஃபால்க்ஸ், வில்லியம் ஓ ரூர்க், பென் சீயர்ஸ், இஷ் சோதி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணிக்கு டிம் செய்ஃபெர்ட் - டாம் பிளெண்டல் இனை தொடக்கம் கொடுத்தனர். இதில் டாம் பிளெண்டல் 4 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். பின்னர் செய்ஃபெர்டுடன் இணைந்த மைக்கேல் பிரேஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த டிம் செய்ஃபெர்ட் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். அதன்பின் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்கள் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

அவரைத்தொடர்ந்து கேப்டன் மைக்கேல் பிரேஸ்வெல் 23 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, மார்க் சாப்மேன் 12 ரன்களுக்கும், கோல் மெக்கன்ஸி ஒரு ரன்னிலும், ஜிம்மி நீஷம் 16, ஸகாரி ஃபோல்க்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், இஷ் சோதி மற்றும் பென் சீயர்ஸ் ஆகியோரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமளித்தனர். இதனால் நியூசிலாந்து அணி தடுமாறிய நிலையிலும், ஜோஷ் கிளார்க்சன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அணியின் வெற்றிக்கான நம்பிக்கையையும் கொடுத்தார். 

இதன் காரணமாக நியூசிலாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அச்சயமத்தில் வில்லியம் ஓருர்க் ரன் அவுட்டாக, நியூசிலாந்து அணியும் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹின் அஃப்ரிடி 4 விக்கெட்டுகளையும், உசாமா மிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், 2-2 என்ற கணக்கில் டி20 தொடரையும் சமன்செய்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை