PAK vs WI, 1st Test: பேட்டிங்கில் சொதப்பிய விண்டிஸ்; வலிமையான நிலையில் பாகிஸ்தான்!
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற இருந்தது. போதிய வெளிச்சமின்மை காரணகாம தாமதமாக தொடங்கிய இப்போட்டியில் பாகிஸ்தான் அணி டாஸை வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்து விண்டீஸை பந்துவீச அழைத்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டுகளை இழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த சௌத் ஷகீல் மற்றும் முகமது ரிஸ்வான் இணை அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அதன்பின் இப்போட்டியில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சௌத் சகீல் 6 பவுண்டரிகளுடன் 86 ரன்களைச் சேர்த்த நிலையில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய சல்மான் அலி ஆகா 2 ரன்னிலும், நௌமன் அலி ரன்கள் ஏதுமின்றியும் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். மறுபக்கம் முகமது ரிஸ்வான் 71 ரன்களை சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். இதனையடுத்து களைறங்கிய சஜித் கான் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 18 ரன்களையும், குர்ராம் ஷஷாத் 7 ரன்களிலும் என நடையைக் கட்டினர்.
இதனால் பாகிஸ்தான் அணி இரண்டாம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னரே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜெய்டன் சீல்ஸ் மற்றும் ஜொமல் வாரிக்கன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் மைக்கேல் லூயிஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கேசி கார்டியும் அடுத்த பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். அவர்களைத் தொடர்ந்து கேப்டன் பிராத்வைட்டும் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய கேவம் ஹாட்ஜ், அலிக் அதானஸ், ஜஸ்டின் க்ரீவ்ஸ், டெவின் இம்ளச் உள்ளிட்டோர் ஒற்றை இலக்க ரன்களில் விக்கெட்டுகளை இழக்க, கெவின் சிங்க்ளேர் 11, குடகேஷ் மோட்டி 19, அதிரடியாக விளையாடிய ஜெய்டன் சீல்ஸ் 22 மற்றும் இறுதிவரை களத்தில் இருந்த ஜொமல் வாரிக்கன் 31 ரன்களையும் சேர்த்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 25.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் நொமன் அலி 5 விக்கெட்டுகளையும், சஜித் கான் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
இதனையடுத்து 97 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் ஷான் மசூத் - முகமது ஹுரைரா இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், முகமது ஹுரைரா 29 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய பாபர் அசாம் 5 ரன்களை மட்டுமே எடுத்த கையோடு விக்கெட்டை இழந்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான் மசூத் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
Also Read: Funding To Save Test Cricket
பின்னர் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 52 ரன்களைச் சேர்த்த கையோடு ஷான் மசூத் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்களைச் சேர்த்துள்ளது. இதில் காம்ரன் குலாம் 9 ரன்களுடனும், சௌத் ஷகீல் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜொமல் வாரிக்கன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 202 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.