PAK vs WI, 2nd Test: ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்திய நொமன் அலி; 163 ரன்களில் விண்டீஸ் ஆல் அவுட்!
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகாள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முல்தானில் நடந்த இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 127 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இதனையடுத்து பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்றள்ள வெஸ்ட் இண்டிஸ் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இப்போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியில் அமீர் ஜாங்கூவும், பாகிஸ்தான் அணியில் காஷிப் அலியும் அறிமுக வீரர்களாக இடம்பிடித்துள்ளனர். இதனையடுத்து பேட்டிங் செய்ய களமிறங்கிய விண்டீஸ் அணிக்கு கேப்டன் பிராத்வைட் மற்றும் மைக்கைல் லூயிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இதில் லூயிஸ் 4 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அறிமுக வீரர் அமீர் ஜங்கூவும் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தார். அதன்பின் நிதானமாக விளையாடி வந்த கிரேய்க் பிராத்வைட் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய அலிக் அதானாஸ், ஜஸ்டீன் க்ரீவ்ஸ், டெவின் இம்லாச், கேவின் சின்க்ளேர் ஆகியோரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். இதில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் நோவ்மன் அலி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் பதிவுசெய்து அசத்தினார்.
அவர்களைத் தொடர்ந்து 21 ரன்களை எடுத்திருந்த காவெம் ஹட்ஜ் 21 ரன்களுக்கும், கீமார் ரோச் 25 ரன்களுக்கும் என ஆட்டமிழந்தனர். இறுதியில் குடகேஷ் மோட்டி மற்றும் ஜொமல் வாரிக்கன் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் இறங்கினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய குடகேஷ் மோட்டி தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். மேற்கொண்டு இருவரும் இணைந்து கடைசி விக்கெட்டிற்கு 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர். பின் 55 ரன்களைச் சேர்த்த நிலையில் குடகேஷ் மோட்டி தனது விக்கெட்டை இழந்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜொமல் வாரிக்கன் ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 36 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 41.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணி தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட்டுகள் உள்பட 6 விக்கெட்டுகளையும், சஜித் கான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸைத் தொடரவுள்ளது.