தொன்று தொட்டு தொடரும் பாகிஸ்தானின் ஃபில்டிங் காதல் கதை; வைரலாகும் காணொளி!
பாகிஸ்தான் அணி தற்பொழுது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இந்த தொடரில் முதல் போட்டி இன்று ஆஸ்திரேலியாவில் வேகத்திற்கு புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் தரப்பில் அமீர் ஜமால் மற்றும் குர்ரம் சேஷாத் என இரண்டு இளம் பந்துவீச்சாளர்கள் அறிமுகமாக போட்டியில் களமிறங்கினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவஜா இருவரும் களமிறங்கினார்கள். இதில் உஸ்மான் கவஜா ஒருபுறம் பொறுமை காட்ட, இன்னொரு பக்கம் தனது கடைசி டெஸ்ட் தொடரில் விளையாடும் வார்னர் வெளுத்துக்கட்ட ஆரம்பித்தார். பழைய வார்னராக விளையாட ஆரம்பித்த அவர் பாகிஸ்தானின் எந்த பந்துவீச்சாளர்களையும் விட்டு வைக்காமல் அதிரடியாக 41 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
கவாஜா தன்னுடைய பொறுமையான ஒத்துழைப்பை அப்படியே தொடர்ந்தார். இன்றைய முதல் சீசன் முடிவில் 25 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி விக்கெட் இழக்காமல் 117 ரன்கள் எடுத்து தற்போது மதிய உணவு இடைவேளைக்கு சென்று இருக்கிறது. டேவிட் வார்னர் 67 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 72 ரன்கள் எடுத்திருக்கிறார். உஸ்மான் கவஜா 84 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்திருக்கிறார்.
பாகிஸ்தானின் இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் அதிவேக பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹாரிஸ் ரவுஃப் தேர்வு செய்யப்படாதது விமர்சனமாக இருந்து வந்தது. இந்த நிலையில் ஷாகின் அஃப்ரிடி பந்துவீச்சில், ஒன்பது ஓவர்களில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் 45 ரன்கள் அடித்திருக்கிறார்கள். யாராலும் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
இப்படியான நிலையில் உஸ்மான் கவாஜா அடித்த ஒரு பந்து எட்ஜ் எடுக்க, அதைப் பிடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்த அப்துல்லா ஷஃபிக் கைகளுக்கு இடையில் பந்தை விழவிட்டு, விக்கெட்டுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பையும் கோட்டை விட்டார். பாகிஸ்தானின் பீல்டிங் ஒரு காதல் கதையாக மீண்டும் தொடர்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் இந்த ஃபீல்டிங் குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.