PAK vs NZ, 4th ODI: நியூசிலாந்தை 102 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்!

Updated: Sat, May 06 2023 12:16 IST
Image Source: Google

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 ஒருநாள்  போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.  இதில் நடைபெற்ற டி20 தொடரை இரு அணிகளும் 2-2 என்ற கணக்கில் சமன் செய்தன. 

இதையடுத்து நடைபெற்ற முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெறிபெற்று 3-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் முதலில் பந்துவீச முடிவுசெய்ததார். 

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஸமான் 14 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த இமாம் உல் ஹக் - பாபர் அசாம் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இமாம் உல் ஹக் 44 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முகமது ரிஸ்வானும் 24 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து வந்த ஆகா சல்மான் கேப்டனுடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில் அபாரமாக விளையாடிய பாபர் அசாம் சதமடித்த கையோடு 107 ரன்களி பெவிலியன் திரும்ப, அகா சல்மானும் 58 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.  இறுதியில் இஃப்திகார், முகமது ஹாரிஸ், ஷாஹின் அஃப்ரிடி ஆகியோர் ஓரளவு ரன்களைச் சேர்த்து பங்களித்தனர். இதன்மூலம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்களைச் சேர்த்தது, நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும், பென் லிஸ்டர், இஷ் சோதி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்கள் வில் யங் 15 ரன்களிலும், டாம் பிளெண்டல் 23 ரன்களிலும், டெரில் மிட்செல் 34 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த  கேப்டன் டாம் லேதம் - மார்க் சாப்மேன் இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய லேதம் அரைசதம் கடந்து, 60 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ஆட்டமிழக்க, மறுமுனையில் மார்க் சாப்மேன் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். பின்னர் வந்த வீரர்களாலும் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதனால் 43.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் தரப்பில் உசாமா மிர் 4 விக்கெட்டுகளையும், முகமது வாசிம் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியதுடன், 4-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரிலும் முன்னிலைப் பெற்றுள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை