விராட் கோலியுடன் ஒப்பிடுவது எனக்கு பெருமை - பாபர் அசாம் நெகிழ்ச்சி!
பாகிஸ்தான் அணி இளம் பேட்ஸ்மேனும், கேப்டனுமானவர் பாபர் அசாம். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இவர் செய்துவரும் சாதனைகள் ஏறாளம். மேலும் சமீபத்திய ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்தும் சாதனைப் படைத்துள்ளார்.
தனது அபாரமான பேட்டிங், கண்ணை கவரும் கவர் டிரைவ் போன்றவற்றால் சர்வதேச ஜாம்பாவன்களுடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசுவது வழக்கம். அந்த வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலியுடன் பாபர் அசாம் ஒப்பிட்டு பேசப்படுகிறார்.
இந்நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியுடன் என்னை ஒப்பிடுவது பெருமையாக இருக்கிறது என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய பாபர் அசாம் " உலகின் தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் விராட் கோலி. அவர் கிரிக்கெட் உலகின் அனைத்து நிலைகளிலும் சாதித்திருக்கிறார். பலரும் என்னை அவருடன் ஒப்பிடும் போது பெருமையாக இருக்கும். ஏனென்றால் அவர் ஒரு மிகப்பெரிய வீரர். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னை கேட்பீர்கள் என்றால், ஒருவரை ஒருவர் எப்போதும் ஒப்பீடு செய்யக் கூடாது என்பதே என் கருத்து.
ஆனால் அப்படி ஒப்பிட்டு பேசுவது சிலருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. என்னை பொறுத்தவரை நன்றாக விளையாடி அணியை வெற்றிப்பெற செய்ய வேண்டும். அதுவே என் முதல் நோக்கமாக இருக்கும். அந்த வெற்றியினால் பாகிஸ்தானுக்கு பெருமை தேடி தர வேண்டும். எனக்கென்று பேட்டிங்கில் ஒரு பாணி இருக்கிறது. அதேபோல் விராட் கோலியின் பாணி வேறு" என்றார் பாபர் அசாம்.
பல முன்னணி கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன். எவராலும் ஒரே மாதிரியாக நீண்ட காலம் விளையாட முடியாது. எல்லா நேரத்திலும் நாம் கிரிக்கெட்டில் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். நானும் அப்படிதான். இந்தத் திறமையை நான் இப்படியே பயன்படுத்திக்கொண்டு என்னுடைய விளையாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவேன்" என்று தெரிவித்துள்ளார்.