PAK vs ENG, 2nd Test: வெற்றிக்கு போராடும் இங்கிலாந்து, பாகிஸ்தான் வீரர்கள்!

Updated: Sun, Dec 11 2022 20:00 IST
Pakistan Fight Back After England Set Stiff Target In 2nd Test (Image Source: Google)

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், 2ஆவது டெஸ்ட் போட்டி முல்தானில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி ஒருநாள் கிரிக்கெட்டை போல பேட்டிங் ஆடி 51.4 ஓவரில் முதல் இன்னிங்ஸில் 281 ரன்களை அடித்து ஆல் அவுட்டானது. இங்கிலாந்து தொடக்க வீரர் பென் டக்கெட் 49 பந்தில் 63 ரன்களும், ஆலி போப் 61 பந்தில் 60 ரன்களும் அடித்தனர். ரூட்(8), ஹாரி ப்ரூக்(9) ஆகியோர் ஏமாற்றமளித்தனர். 

பின் ஸ்டோக்ஸ் 30 ரன்களும், வில் ஜாக்ஸ் 31 ரன்களும் அடிக்க, பின்வரிசையில் மார்க் உட் அதிரடியாக ஆடி 27 பந்தில் 36 ரன்கள் அடிக்க, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் அணியில் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அப்ரார் அகமது என்ற ரிஸ்ட் ஸ்பின்னர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 76 ரன்கள் மற்றும் சௌத் ஷகீல் 63 ரன்கள் என இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்ற அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் பென் டக்கெட் 79 ரன்கள் அடித்தார். 

ஹாரி ப்ரூக் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்தார். ப்ரூக் 108 ரன்களை குவித்தார்.  கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 41 ரன்கள் அடிக்க, 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 275 ரன்கள் அடித்தது.  354 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, 356 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது. 

அதன்பின் 356 ரன்கள்  என்ற இலக்கை விரட்டிவரும் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷாஃபிக் மற்றும் முகமது ரிஸ்வான் களமிறங்கினர். அப்துல்லா 45 ரன்களும், ரிஸ்வான் 30 ரன்களும் அடித்தனர். கேப்டன் பாபர் அசாம் ஒரு ரன்னில் ஆடமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் இமாம் உல் ஹக் மற்றும் சௌத் ஷகீல் ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக பேட்டிங் ஆடி இருவரும் அரைசதம் அடித்தனர்.

பின் 4ஆவது விக்கெட்டுக்கு 88 ரன்களை சேர்த்தனர். இந்த பார்ட்னர்ஷிப் பாகிஸ்தான் அணிக்கு முக்கியமானதாக அமைந்தது. இமாம் உல் ஹக் 60 ரன்களுக்கு ஆட்டமிழக்க, சௌத் ஷகீல் 53 ரன்களுடனும் அவருடன் ஃபஹீம் அஷ்ரஃப் (3) களத்தில் இருக்க, 4 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை பாகிஸ்தான் அடித்திருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்தது. பாகிஸ்தான் வெற்றிக்கு 157 ரன்களும், இங்கிலாந்தின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளும் தேவைப்படுவதால் இரண்டுமே சாத்தியம் என்பதால் ஆட்டம் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை