பாகிஸ்தான் வீரர்கள் தேர்வு முறை குறித்து வெடிக்கும் சர்ச்சை; சீனியர் வீரர்களின் குற்றச்சாட்டால் பரபரப்பு!
சமீப காலமாக பாகிஸ்தான் அணியின் வீரர்கள் தேர்வு முறை குறித்து தினம் தினம் புதிய குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
அதன்படி பாகிஸ்தான் அணியில் சமீப காலமாக சீனியர் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. சமீபத்தில் முகமது அமீர், பாகிஸ்தானில் அனுபவமே இல்லாத இளம் வீரர்கள் சர்வதேச தொடரில் கட்டாயமாக களமிறக்க படுகிறார்கள் என கூறியிருந்தார். அதே போல கேப்டனுக்கு நெருக்கமான வீரர்கள் மட்டும் தேர்வு செய்யப்படுவதாக வீரர் ஜுனைத் கான், கூறினார்.
இந்நிலையில் சோயிப் மாலிக் ஒரு படி மேல் சென்று பாகிஸ்தான் அணியில் குறிப்பிட்ட வீரருக்கு நெருக்கமான வீரர்களை மட்டுமே அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சோயிப் மாலிக், “பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாமுக்கு வேண்டப்பட்டவர்கள் மட்டும் அணியில் சேர்க்கப்படுகின்றனர். மற்றவர்கள் ஒதுக்கப்படுகின்றன. அதற்கு சமீபத்தில் நடந்த ஜிம்பாப்வே தொடரையே ஒரு எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஜிம்பாப்வே தொடரின் போது கேப்டன் பாபர் அசாம் பரிந்துரைத்த வீரர்கள், தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்குழுவுடன் பாபர் கடும் சண்டை போட்டுள்ளார். அதன் பின்னர் தனது முடிவே இறுதியாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனையாக விதித்துள்ளார்.
எனது விதி எதுவாக இருந்தாலும் அதனை கடவுள் முடிவு செய்ய வேண்டும், தனிப்பட்ட யாரும் முடிவு செய்யக்கூடாது. நான் இனி அணியில் சேர்க்கப்படவில்லை என்றாலும் கூட கவலைப்பட மாட்டேன். ஆனால் பாகிஸ்தான் அணியில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக என் சக வீரர்களுடன் நிற்காவிட்டால் நிச்சயம் வருத்தப்பட்டிருப்பேன். அதனால் தான் தற்போது உண்மையை கூறினேன்” என தெரிவித்துள்ளார்.
சோயிப் மாலிக்கின் இக்கருத்தான எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பூதாகரமாக வெடித்துள்ளது.