முக்கிய வீரர்களுக்கு வைரஸ் தொற்று; பதற்றத்தில் பாகிஸ்தான்!

Updated: Tue, Oct 17 2023 20:42 IST
Image Source: Google

ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி விளையாடியுள்ள மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றியும், ஒரு தோல்வியையும் பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆம் இடத்தில் உள்ளது. 

இதில் அஹ்மதாபாத்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்து இருந்தது. ஆனால், அதை பாகிஸ்தான் வீரர்கள் பெரிதாக கண்டு கொள்ளவில்லை. அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட பெங்களூர் கிளம்பி வந்துள்ளது பாகிஸ்தான் அணி. வரும் அக்டோபர் 20 ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

இந்நிலையில் பெங்களூரு வந்தவடைந்த பாகிஸ்தான் வீரர்களில் ஒருசிலருக்கு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் அப்துல்லா ஷஃபிக் மற்றும் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி, கடந்த போட்டியில் அணியில் இடம் பெறாத உசாமா மிர் மற்றும் ஃபகர் ஸமான் ஆகிய நான்கு வீரர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி இன்று பயிற்சியை தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை எந்த வீரரும் பயிற்சி செய்ய ஹோட்டல் அறையை விட்டு வெளியே வரவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் அப்துல்லா ஷபிக் அந்த அணியில் முக்கிய வீரர்களாக உள்ளனர். 

இது பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில வீரர்களுக்கு கடந்த சில நாட்களில் காய்ச்சல் இருந்தது உண்மைதான். ஆனால், அனைவரும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருக்கிறார்கள். அனைவரும் உடல்நலம் தேறி உள்ளனர். விரைவில் அவர்கள் போட்டிகளில் பங்கேற்கும் நிலையை எட்டுவார்கள்” என கூறியுள்ளார். இதனால் அடுத்த போட்டியில் பாகிஸ்தான் அணி பின்னடைவை சந்திக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை