மகளிர் உலகக்கோப்பை 2022: விண்டீஸை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவுசெய்தது பாகிஸ்தான்!
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டி தொடங்குவதற்கு முன்னரே மழை பெய்த காரணத்தில் இப்போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிரணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 89 ரன்களை மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் நிதா தார் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையடுத்து இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் முனீபா அலி - கேப்டன் பிஷ்மா மரூஃப் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்மூலம் 18.5 ஓவர்களில் பாகிஸ்தான் அணி இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு உலகக்கோப்பை தொடரில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.