பதற்றத்துக்கு பதிலாக உற்சாகமாக இருக்கிறேன் - பாபர் ஆசாம்!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
டி20 உலக கோப்பை வரலாற்றில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுவது இது 3ஆவது முறை. கடந்த 2009ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டி20 உலக கோப்பை லீக் சுற்றில், பாகிஸ்தான், இங்கிலாந்திடம் தோல்வி அடைந்த போதும், கோப்பையை வென்றது. 2010ஆம் அண்டில் வெஸ்ட்இண்டீசில் நடந்த டி20 உலக கோப்பை சூப்பர் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோப்பையை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவதால் இன்றைய போட்டி கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது.
இப்போட்டிக்கு முன்னதாக பேசிய பாபர் ஆசாம், “கடைசி மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் பதற்றத்தைவிட உற்சாகமாக இருக்கிறேன். அழுத்தம் உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அழுத்தத்தை நம்பிக்கையின் வாயிலாகவும், தன்னம்பிக்கையின் வாயிலாகவுமே கடக்க முடியும். பாகிஸ்தானின் ஓட்டுமொத்த மக்களும் எப்பொழுதும் எங்கள் முதுகெலும்பாக இருந்து வருகின்றனர்.
அவர்கள் தங்கள் உற்சாகத்தின் மூலம் எங்களை நிலைநிறுத்துகிறார்கள். எங்களுக்கு ஆதரவளித்து தொடர்ந்து பிரார்த்தனை செய்யுமாறு நான் அவர்களை மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா, 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டி அனுபவங்களை எங்களிடம் பகிர்ந்து கொண்டார்.
அது எங்களது நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இறுதிப்போட்டியில் வெற்றிபெற திட்டங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்துவோம், மேலும் வேகப்பந்துவீச்சு தாக்குதலை பலமாகப் பயன்படுத்துவோம். பவர்பிளேவில் அதிக விக்கெட்களை கைப்பற்றுவது இன்றியமையாததாக இருக்கும்” என்று தெரிவித்தார்.