இந்தியா - பாகிஸ்தான் டி20 தொடர்; ஆர்வம் காட்டும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் - தகவல்!
ஐசிசி நடத்தம் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது. அந்தவகையில், பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கும் இத்தொடரானது மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேருக்கு நேர் இத்தொடரில் மோதும் என்பதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
ஆனால் இத்தொடரானது பாகிஸ்தானில் நடைபெறவுள்ள காரணத்தால் இந்திய அணி பங்கேற்குமா என்ற சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏனெனில் கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வந்தது. ஆனால் நாளடைவில் தற்சமயம் நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை உள்ளிட்ட அணிகள் பாகிஸ்தானுக்கு சென்று விளையாடி வருகின்றன.
ஆனால் இந்திய அணி அரசிய சூழ்நிலையைக் காரணம் காட்டி 2009ஆம் ஆண்டிற்கு பிறகு பாகிஸ்தான் சென்று விளையாடுவதை தவிர்த்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் கடந்த 2012ஆம் ஆண்டிற்கு பிறகு இரு அணிகளுக்கும் இடையேயான இருதரப்பு கிரிக்கெட் தொடர்களும் நடைபெறாம், ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்தவகையில் இவ்விரு அணிகளுகும் மோதும் போட்டியானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிறைந்த போட்டியாக பார்கப்படுகிறது.
மேற்கொண்டு கடந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடத்தப்பட்டு, அதில் இந்திய அணியும் சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் இம்முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் ஹைப்ரீட் மாடலில் நடத்தும் படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஐசிசியிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.
ஆனால் என்ன நடந்தாலும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தானில் மட்டுமே நடைபெறும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி சமீபத்தில் கூறி இருந்தார். இந்நிலையில் தான் ஐசிசியின் வருடாந்திர கூட்டம் இலங்கையில் ஜூலை 19 முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இதில் எதிர்வரும் தொடர்கள் குறித்தும், சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் மட்டும் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்க பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்வி ஆகியோரும் இலங்கை சென்றுள்ளனர். இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணியானது இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு டி20 தொடரை நடத்த ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு பிறகு இரு அணிகளின் ஓய்வு நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டிருப்பதாகவும், மேலும் இந்த போட்டிகள் அனைத்து பொதுவான இடத்தில் நடத்தவுள்ளதாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் மொஹ்சின் நக்பி விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடைபெறும் ஐசிசி வருடாந்திர கூட்டத்திலும் விவாதிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy
முன்னதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுடன் இணைத்து ஆஸ்திரேலியாவில் முத்தரப்பு கிரிக்கெட் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது. அதுகுறித்த பேச்சுவார்த்தைகளும் இந்த ஐசிசி கூட்டத்தில் இடம்பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருதரப்பு தொடர் மீண்டும் நடைபெறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.