BAN vs PAK, 2nd Test: சஜித் கான் மேஜிக்கில் டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்!

Updated: Wed, Dec 08 2021 16:51 IST
Image Source: Google

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி மிர்பூரில் நடைபெற்று வருகிறது. முதலிரண்டு நாள்களில் மழை பாதிப்பால் 63.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டன. 3ஆவது நாள் ஆட்டம் மழையால் முழுமையாகத் தடைபட்டது.

2 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்திருந்த பாகிஸ்தான் 4ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது பாகிஸ்தான்.

அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 76 ரன்களும், அசார் அலி 56 ரன்களும், முகமது ரிஸ்வான் 53 ரன்களும், ஃபவாத் அலாம் 50 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசத்துக்கு பேட்டர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ்தானின் சுழற்பந்துவீச்சாளர் சஜித் கான் சுழலில் வங்கதேச பேட்டர்கள் அடுத்தடுத்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர்.

இதனால் 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் கடைசி நாளான இன்று முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேச அணி 87 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் ஆல் அவுட்டாகி ஃபாலோ ஆன் ஆனது. பாகிஸ்தான் அணி தரப்பில் சஜித் கான் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியைத் தவிர்க்க போராடிய வங்கதேச அணி, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 

இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் 205 ரன்களைச் சேர்த்திருந்த வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த இன்னிங்ஸிலும் பாகிஸ்தானின் சஜித் கான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதன்மூலம் பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியை இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை