PAK vs ENG: காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறினார் ஹாரிஸ் ராவூஃப்!
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த டிசம்பர் 1ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்கியது.
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிலும் கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 263 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் எட்டு விக்கெட்டுகள் இருந்தன. இதனால் பாகிஸ்தானின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கிரிக்கெட் ரசிகர்கள் கருதினர்.
எனினும் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ராபின்சன் ஆகியோர் அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை சாய்த்தனர். இதன் மூலம் பாகிஸ்தான் அணி 268 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இது பாகிஸ்தான் மண்ணில் இங்கிலாந்து பெரும் மூன்றாவது டெஸ்ட் வெற்றியாகும்.
இந்நிலையில், இந்த டெஸ்ட் போட்டியின் போது பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ராவூஃப் காயமடைந்து, இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச களத்திற்கு வரவில்லை. இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட எம்ஆர்ஐ (MRI) ஸ்கேன் பரிசோதனையில், இரண்டாம் நிலை காயம் (Grade-II strain) கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்துடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இவருக்கான மாற்று வீரர் யார் என்பதையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இங்கிலாந்து அணிக்காக அறிமுக டெஸ்ட் போட்டியில் விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோனும் காயம் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.