ஐசிசி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் வீரருக்கு அபராதம் விதிப்பு!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஏற்கெனவே நியூசிலாந்து அணி முதல் போட்டியை வென்றுள்ள நிலையில், இப்போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் முனைப்பில் உள்ளது. அதேசமயம் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் அணியும் விளையாடும் என்பதால் இப்போட்டி மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வரும் நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.
இந்நிலையில் இது ஐசிசி விதிகளுக்கு எதிராந்து என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சத வீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது. மேற்கொண்டு குஷ்தில் ஷாவும் தனது தவறை ஒப்பு கொண்டதுடன், ஐசிசி விதித்துள்ள அபராதத்தையும் ஏற்றுள்ளதன் காரணமாக மேற்கொண்டு விசாரணைக்கு வார தேவையில்லை என்பதையும் ஐசிசி தெரிவித்துள்ளது.
Also Read: Funding To Save Test Cricket
அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.