இப்போட்டியை ஐசிசி நடத்தவில்லை; பிசிசிஐ நடத்திய போட்டி இது - மிக்கி ஆர்த்தர்!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன் மூலம் உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் 8ஆவது முறையாக இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது பாகிஸ்தான். முதல் இன்னிங்ஸ் ஆட்டம் முடிவடைந்த பின்னரே பாகிஸ்தான் வீரர்களின் உடல்மொழியில் மொத்தமாக பெரிய மாற்றம் ஏற்பட்டது.
அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களை நம்பாமல் திடீரென ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்ததன் மூலமாக பாகிஸ்தான் தோல்வியை ஒப்புக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியின் வெற்றிக்கும் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கும் அகமதாபாத் ரசிகர்களின் பங்கும் மறைமுகமாக உள்ளது.
ஏனென்றால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆசாம் டாஸ் போடுவதற்காக மைதானத்தில் களமிறங்கி நடந்து வந்த போதே இந்திய ரசிகர்கள் அவரை கலாய்க்க தொடங்கி வம்புக்கு இழுத்தார்கள். டாஸின் போது ரவி சாஸ்திரி எழுப்பிய கேள்விக்கு கூட பாபர் அசாமால் பதில் கூற முடியவில்லை. அதேபோல் பந்துவீச்சின் போது பாகிஸ்தான் அணி ஹாரிஸ் ராவுஃப் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சில பவுன்சர்களை விளாசி அச்சுறுத்தினார்.
அதேபோல் மைதானத்தில் இருந்த டிஜே, இந்திய அணிக்கு சாதகமான பாடல்களையும், ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் பெயர்களையும் கூறியே உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்தார். டிஜேவின் மைக்கில் இருந்து ஒருமுறை கூட பாகிஸ்தான் வீரர்களுக்கு ஆதரவாகவோ, பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களின் ஷாட்களுக்கோ, விக்கெட்டுக்கோ உற்சாக குரல் கொடுக்கவில்லை.
இந்த நிலையில் போட்டிக்கு பின் பேசிய பாகிஸ்தான் அணியின் இயக்குநர் மிக்கி ஆர்தர், “இந்த உலகக்கோப்பை போட்டி ஐசிசி சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் இல்லை. இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு கிரிக்கெட் தொடர் போல் உள்ளது. பிசிசிஐ சார்பாக நடத்தப்பட்ட போட்டியை போல் உள்ளது. பாகிஸ்தான் அணிக்கு ஆதரவாக எந்த கோஷமும் வரவில்லை. இதனை நான் தோல்விக்கு காரணமாக கூறவில்லை. இந்திய அணியை மீண்டும் இறுதிப்போட்டியில் சந்திக்க ஆதரவாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.