பாக்., பந்து வீச்சாளர்களுக்கு அமீரின் ஆலோசனை தேவை - வாசிம் அக்ரம் !
பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் முகமது அமீர். கடந்த 2017ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இன் போது இந்திய அணி விக்கெட்களை அடுத்தடுத்து வீழ்த்தி, பாகிஸ்தான் அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.
இந்நிலையில், தனக்கு, பாகிஸ்தான் அணியில் சரியான மரியாதை கிடைக்கவில்லை. மன ரீதியாக தனக்கு நிர்வாகம் கொடுத்த அழுத்தம் காரணமாக முகமது அமீர் கடந்த 2020, டிசம்பர் மாதம் திடீரென தனது ஓய்வை அறிவித்தார். 28 வயதே ஆகும் அவர் ஓய்வு அறிவித்தது அதிர்ச்சியை கிளப்பியது. இதையடுத்து அவர் உள்ளூர் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த இளம் வீரர்களுக்கு அமீரின் ஆலோசனை தேவை என அந்த அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“பாகிஸ்தான் அணியில் முகமது அமீருக்கான இடம் அப்படியே இருக்கிறது என நான் நினைக்கிறேன். ஏனெனில் அடுத்து வரவுள்ள மூன்று ஆண்டுகளில் உலக கோப்பை தொடர்கள் நடைபெறவுள்ளன.
தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் நிரைய உள்ளனர். ஆனால் அவர்களை வழிநடத்த அணியின் மூத்த பந்துவீச்சாளர்கள் தேவை. ஏனெனில் இளம் பந்துவீச்சாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதன் மூலம், அவர்களுக்கு விருப்பங்களை வழங்குவதன் மூலமும் அவை மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
நான் ஒரு இளம் பந்து வீச்சாளராக இருக்கும் போது என்னை வழிநடத்த இம்ரான் கான் இருந்தார். ஒவ்வொரு பந்துக்கும் முன்பாக நான் அவரிடம் ஆலோசனைகளை கேட்பேன். ஒரு மூத்த பந்து வீச்சாளர் ஏதாவது செய்யச் சொல்லும்போது அது கூடுதல் நம்பிக்கையைத் தருகிறது. அதனால்தான் அமீர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.