PAKW vs WIW, 2nd ODI: ஸ்டாஃபானி டெய்லர், காம்பெல் அதிரடியில் தொடரை வென்றது விண்டீஸ்!

Updated: Sun, Apr 21 2024 20:49 IST
Image Source: Google

 

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் நடைபெற்றும் வரும் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய அந்த அணியில் முனீபா அலி 2 ரன்களுக்கு விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த அமீன் - மரூஃப் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்தும் அசத்தினர். பின் 50 ரன்களில் அமீனும், 65 ரன்களில் மரூஃபும் தங்கள் விக்கெட்டை இழந்தனர். 

பின்னர் களமிறங்கிய வீராங்கனைகளில் நஜிஹா அல்வி 25 ரன்களைச் சேர்த்ததைத் தவிற மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ராம்ஹராக், சினெல்லே ஹென்றி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், அஃபி ஃபிளெட்சர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியிலும் தொடக்க வீராங்கனை ரஷாதா வில்லியம்ஸ் 7 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் இணைந்த ஹீலி மேத்யூஸ் - ஷெமைன் காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஹீலி மேத்யூஸ் 44 ரன்களில் விக்கெட்டை இழந்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

அதேசமயம் மறுபக்கம் அரைசதம் கடந்து விளையாடி வந்த ஷெமைன் காம்பெல் 52 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் களமிறங்கிய ஸ்டாஃபானி டெய்லர் ஒருபக்கம் அதிரடியாக விளையாட, மறுபக்கம் களமிறங்கிய வீராங்கனைகள் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இருப்பினும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய டெய்லர் அரைசதம் கடந்ததுடன் 73 ரன்களைச் சேர்த்து  அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். 

இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் 2 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டாஃபானி டெய்லர் ஆட்டநாயகி விருதை வென்றார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை