என் வாழ்க்கையின் சிறந்த வெற்றி - பாட் கம்மின்ஸ்!
ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணிக்கு ரூட் 118 ரன்கள் அடிக்க, 393 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 386 ரன்கள் அடித்தது. கவாஜா 141 ரன்கள், அலெக்ஸ் கேரி 66 ரன்கள் அடித்தனர். இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
முடிவில் 280 ரன்கள் முன்னிலை பெற்றது. இலக்கை துரத்திய ஆஸி., அணிக்கு கவாஜா 65 ரன்கள் அடித்து அவுட்டானார். 227 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்திருந்தது ஆஸ்திரேலிய அணி, வெற்றிபெற இன்னும் 54 ரன்கள் தேவைப்பட்டது. இக்கட்டான சூழலில் பொறுப்புடன் விளையாடி 44 ரன்கள் அடித்தார் கம்மின்ஸ். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பரபரப்பு வெற்றியை பெற்றது.
இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ், “இந்த வெற்றி 2019ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரின் ஹெட்டிங்லே போட்டியை நினைவுபடுத்தவில்லை என்று கூறினால் அது பொய்தான். அந்தப் போட்டியில் வெற்றியை நழுவவிட்டது எப்போதும் சோகத்தையே கொடுக்கும். ஆனால் இன்று இந்த வெற்றி மருந்தாக அமைந்துள்ளது. ஓய்வறையில் உள்ள வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். நிச்சயம் நம்பர் 1 அணி நாங்கள்தான் என்று நிரூபித்துள்ளோம். அதேபோல் என் வாழ்க்கையில் அடைந்த மிகச்சிறந்த வெற்றி இதுதான்.
கடந்த 2 ஆண்டுகளாக 20 டெஸ்ட் போட்டிகளுக்கும் மேலாக சிறப்பாக விளையாடி வருகிறோம். நாங்கள் எங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தும் போது, சிறந்த அணியாக இருக்கிறோம். இந்த மைதானத்தில் ரசிகர்கள் எங்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் சில கோஷங்கள் எழுப்பினார்கள். ஆனால் அதனையும் மீறி எளிதாக வெற்றியை பெற்றுள்ளோம். ஒருவேளை முதல் நாளில் இங்கிலாந்து அணி டிக்ளேர் செய்யவில்லை என்றால், இன்றைய நாளில் நான் அரைசதம் விளாசி இருப்பேன்” என்று தெரிவித்தார்.