ஐசிசி ஆண்டின் சிறந்த வீரர் 2023 விருதை வென்றார் பாட் கம்மின்ஸ்!

Updated: Thu, Jan 25 2024 20:29 IST
Image Source: Google

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஆண்டுதோறும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் கிரிக்கெட் வீரர் வீராங்கனைகளைத் தேர்வுசெய்து பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்கி கௌரவிப்பது வழக்கம். அந்த வகையில் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு வழங்கப்படும் சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பை விருதுக்கு நான்கு வீரர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. 

இதில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அணியை திறம்பட வழிநடத்தி அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஸ்திரேலிய அணி கோப்பையை வெல்ல உதவிய டிராவிஸ் ஹெட், உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசிய இந்திய அணியின் விராட் கோலி மற்றும் ஆண்டு முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன.

இதில் 2023ஆம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த வீரர் விருதை ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் வென்றுள்ளார். கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப், இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் கோப்பை டெஸ்ட் தொடர், இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் என அனைத்திலும் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தி கோப்பையை வென்று கொடுத்ததன் விளைவாக அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

மேலும் கடந்தாண்டு 24 சர்வதேச போட்டிகளில் விலையாடிய பாட் கம்மின்ஸ் 59 விக்கெட்டுகளையும், 422 ரன்களையும் குவித்துள்ளார். முன்னதாக ஐசிசி டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்த பாட் கம்மின்ஸ், அந்த அணியின் கேப்டனாகவும் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதேபோல் 2023ஆம் ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கு வழங்கப்பட்டும் ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் கோப்பை விருதுக்கும் 4 பெயர்களை ஐசிசி பரிந்துரைத்தது. அதில் இலங்கையை சேர்ந்த சமாரி அத்தபட்டு, இங்கிலாந்து வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான ஆஷ்லே கார்ட்னர், பெத் மூனி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

இப்பட்டியளிலிருந்து இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீராங்கனை நாட் ஸ்கைவர் பிரண்ட் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனைக்கு வழங்கப்படும் ரேச்சல் ஹெய்ஹோ பிளின்ட் கோப்பை விருதை கைப்பற்றினார். 2023ஆம் ஆண்டில் நாட் ஸ்கைவர் பிரண்ட் சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் 894 ரன்களையும், பந்துவீச்சில் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை