ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்!

Updated: Sat, Apr 06 2024 13:18 IST
ரவீந்திர ஜடேஜாவை அப்பீலை வாபஸ் பெற்ற பாட் கம்மின்ஸ்; காட்டமாக கேள்வி எழுப்பிய முகமது கைஃப்! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 18ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி, நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களது இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

அதன்படி இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதையடுத்து இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 18.1 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. 

இந்நிலையில் இப்போட்டியில் சர்ச்சையான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. அதன்படி சிஎஸ்கே அணி பேட்டிங் செய்த போட்டி இன்னிங்ஸின் 19ஆவது ஓவரை ஹைதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் வீசினார். அப்போது அவர் வீசிய யார்க்கர் பந்தை கணிக்கத் தவறிய ரவீந்திர ஜடேஜா பந்தை தடுத்துவிட்டு சிங்கிள் எடுக்க முயற்சித்தார். அப்போது பந்தை பிடித்த புவனேஷ்வர் குமார் அதனை ஸ்டம்பை நோக்கி த்ரோ அடிக்க, அது ஜடேஜாவின் மீது பட்டது. 

இதையடுத்து ரவீந்திர ஜடேஜா விதியை மீறி பந்தை தடுத்ததாக எதிரணி வீரர்கள் அப்பீல் செய்தனர். உடனே நடுவர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாடலாம் என்று பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ், அந்த அப்பீலை வாபஸ் பெற்றார். இதனால் நடுவர்களும் மேற்கொண்டு முடிவினை தெரிவிக்காமல் போட்டியை தொடர அனுமதித்தனர். 

 

இதுதான் தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. ஏனெனில் கிரிக்கெட் விதிப்படி பேட்டிங்  செய்யும் வீரர் எக்காரணத்தைக் கொண்டும் ஃபீல்டர்கள் ஸ்டம்பை நோக்கி அடிக்கும் பந்தை தடுக்க கூடாது (Field Obstruction) என்பது விதியாகும். இதன் காரணமாகவே நேற்றைய போட்டியில் எதிரணி வீரர்கள் அவுட் என அப்பீல் செய்தனார். ஆனால் அச்சமயத்தில் பேட்டிங் செய்துவந்த ரவீந்திர ஜடேஜா பந்தை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வந்தார். 

இதனால் அவர் ஆட்டமிழந்தால், அடுத்ததாக தோனி களமிறங்குவார் என்பதை கணித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் அந்த அப்பீலை வாபஸ் பெற்றது தற்போது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக ஒருபக்கம் பாட் கம்மின்ஸ் ஸ்பிரீட் ஆஃப் கிரிக்கெட் படி சிறப்பாக செயல்பட்டதாகவும், மற்றொரு பக்கம் அடுத்து வரும் பேட்டரை தடுக்கும் வகையில் பாட் கம்மின்ஸ் இந்த முடிவை எடுத்ததாகவும் இருவேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றனர். 

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தனது எக்ஸ் பதிவில், “ஜடேஜாவுக்கு எதிரான அப்பீலை வாபஸ் பெற்றது குறித்து பட் கம்மின்ஸிடம் இரண்டு கேள்விகள் உள்ளன. அதன்படி களத்தில் தடுமாறும் ஜடேஜாவை தக்க வைத்து அதிரடியாக விளையாடக்கூடிய தோனியை பெவிலியனிலேயே வைத்திருப்பதற்கான தந்திரமான அழைப்பா? சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி அந்த இடத்தில் இருந்திருந்தாலும் நீங்கள் இதையே செய்திருப்பீர்களா?” என்று காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை