ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் விளையாட மாட்டார் - உறுதி செய்த தினேஷ் கார்த்திக்
ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மே 4ஆம் தேதி காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து வெளிநாட்டு வீரர்கள் தனி விமானம் மூலம் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில் எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளை செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தவுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. ஆனால் இத்தொடரின் போது பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாட் கம்மின்ஸும் ஒருவர். இவர் கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஆனால் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளில் இவரால் பங்கேற்க முடியாது என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் இத்தகவலை அந்த அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பரான தினேஷ் கார்த்திக் உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக்,“எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் கம்மின்ஸ் பங்கேற்க போவதில்லை என்று கூறினார். அதேசமயம் இயான் மோர்கனும் விளையாடுவாரா என்பது சந்தேகம் தான். ஒருவேளை தன்னை மீண்டும் அணியை வழிநடத்தச் சொன்னால் அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.