2020-ல் உணவு டெலிவரி; 2023 இல் வரலாற்று வெற்றியளர் - வான் மீகெரனுக்கு குவியும் பாராட்டு! 

Updated: Wed, Oct 18 2023 14:39 IST
Image Source: Google

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று தரம்சாலாவில் நடைபெற்ற 15ஆவது லீக் போட்டியில் வலுவான தென் ஆப்பிரிக்காவை கத்துக்குட்டியாக கருதப்படும் நெதர்லாந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. மழையால் 43 ஓவராக குறைக்கப்பட்ட அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 245/8 ரன்கள் எடுத்து ஆரம்பத்திலேயே அசத்தியது.

குறிப்பாக 82/5 என சரிந்த அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் கேப்டன் எட்வார்ட்ஸ் அதிரடியாக 78 ரன்களும், ரூஃலப் வேன் டெர் மெர்வ் 29, ஆர்யன் தத் 23 ரன்களும் அடித்து கடைசி 9 ஓவரில் மட்டும் நெதர்லாந்து 109 ரன்கள் குவிப்பதற்கு உதவினர். மறுபுறம் டெத் ஓவரில் ரன்களை வாரி வழங்கிய தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக லுங்கி நிகிடி, ரபாடா, மார்க்கோ யான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்கா ஆரம்பம் முதலே நெதர்லாந்தின் துல்லியமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 42.5 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு குவிண்டன் டீ காக், மார்க்ரம், ஹென்றிச் க்ளாஸென் என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறிய நிலையில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 43, கேசவ் மகாராஜ் 40 ரன்கள் எடுத்தும் வெற்றி காண முடியவில்லை.

அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய நெதர்லாந்து சார்பில் அதிகபட்சமாக லோகன் வேன் பீக் 3 விக்கெட்டுகளும், ரூஃலப் வேன் டெர் மெர்வி, பஸ் டீ லீட், பால் வேன் மிக்கீரேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இதன் காரணமாக உலகக்கோப்பையில் 16 வருடங்களுக்கு பின் முதல் முறையாக நெதர்லாந்து ஒரு வெற்றியை பதிவு செய்து அசத்தியது. அதை விட உலகக்கோப்பை வரலாற்றில் டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணியை முதல் முறையாக தோற்கடித்து நெதர்லாந்து மாபெரும் சரித்திரம் படைத்தது.

அப்படி சிறப்பாக செயல்படும் நெதர்லாந்த அணியின் இருக்கு சர்வதேச அரங்கில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் பெரும்பாலும் கிடைப்பதில்லை. அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த 2020 டி20 உலக கோப்பை தள்ளிவைக்கப்பட்ட போது நெதர்லாந்து வீரர் பால் வான் மிக்கீரேன் தன்னுடைய ஊரில் பிரபல ஆன்லைன் டெலிவரி செய்யும் நிறுவனத்தில் உணவுகளை வீடு தேடி சென்று கொடுக்கும் வேலைகளை செய்துள்ளார்.

 

அதை தம்முடைய டுவிட்டரில் 2020ஆம் ஆண்டு “இன்று கிரிக்கெட் விளையாட வேண்டும். ஆனால் நான் தற்போது மாதங்களை கடப்பதற்காக ஊபர் ஈட்ஸ் டெலிவரி செய்து கொண்டிருக்கிறேன். காலங்கள் இப்படி மாறுவது வேடிக்கையானது அனைவரும் சிரித்துக் கொண்டிருங்கள் மக்களே” என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.

ஆனால் விடாமுயற்சயால் ஜிம்பாப்வே நாட்டில் நடைபெற்ற குவாலிபயர் தொடரில் நெதர்லாந்து அசத்தியதன் காரணமாக இந்த உலகக்கோப்பையில் முதல் முறையாக விளையாடும் வாய்ப்பை பெற்ற அவர் 9 ஓவரில் 40 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதை பார்க்கும் ரசிகர்கள் உணவு டெலிவரி செய்ததாக கவலைப்படாதீர்கள் தற்போது உங்கள் தாய் நாட்டுக்கு வரலாற்றை டெலிவரி செய்துள்ளீர்கள் என்று அவரை பாராட்டி வருகின்றனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை