PAW vs WIW, 1st ODI: ஆல் ரவுண்டராக கலக்கிய ஹீலி மேத்யூஸ்; வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி!
வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி இன்று கராச்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஷாதா வில்லியம்ஸ் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினார். பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் - காம்பெல் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.
அதன்பின் 45 ரன்களில் காம்பெல் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய வீராங்கனைகளும் அடுத்தடுத்து சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். ஆனாலும் மறுபக்கம் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் ஹீலி மேத்யூஸ் சதமடித்து மிரட்டினார். ஆனாலும் மறுமுனையி களமிறங்கிய வீராங்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்களைக் குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹீலி மேத்யூஸ் 140 ரன்களைச் சேர்த்தார்.
அதன்பின் கடின இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் மகளிர் அணிக்கு தொடக்கமே சரிவர அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீராங்கனைகள் சித்ரா ஆமீன் ஒரு ரன்னிலும், பிஷ்மா மரூஃப் 7 ரன்களிலும் என விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் இணைந்த முனீபா அலி - கேப்டன் நிதா தார் இணை ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் விக்கெட் இழப்பை தடுத்து நிறுத்தினர். பின் நிதா தர் 19 ரன்களுக்கும், முனீபா அலி 22 ரன்களுக்கும் என தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டியதால் பாகிஸ்தான் அணி 65 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை தடுமாறியது.
இதையடுத்து வந்த அலியா ரியாஸ் 16, ஃபாத்திமா சனா 10, நஜிஹா அல்வி 20, துபா ஹசன் 25,டையான பைக் 10 ரனகள் என் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழக்க, பாகிஸ்தான் மகளிர் அணி 35.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி தரப்பில் கேப்டன் ஹீலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹீலி மேத்யூஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.