ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ் - உத்தேச லெவன்!

Updated: Sat, Apr 13 2024 15:27 IST
Image Source: Google

இந்தியாவில் தொடங்கி நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளுக்கு நாள் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்து வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் அதிரடி வீரர்கள் நிறைந்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் விளையாடும் இரு அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் லெவன் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

பஞ்சாப் கிங்ஸ்

ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. டாப் ஆர்டர் பேட்டிங்கில் ஷிகர் தவான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்ஷிம்ரன் சிங் ஆகியோர் ஃபார்மின்றி தவிக்கின்றனர். ஒரு சில ஆட்டங்களில் பேட்டிங்கில் நம்பிக்கை அளித்த சாம் கரணிடம் இருந்து தொடர்ச்சியான செயல் திறன் வெளிப்படவில்லை. காயம் அடைந்த லியாம் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக களமிறங்கிய சிக்கந்தர் ராஸாவும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. 

இதனால் இறுதிக்கட்ட ஓவர்களில் பஞ்சாப்  ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரது அதிரடி ஆட்டத்தை நம்பியே இருக்க வேண்டியது உள்ளது. அதேசமயம் அணியின் பந்துவீச்சில் ஹர்ப்ரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், காகிசோ ரபாடா, ஹர்ஷல் படேல் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் தொடர்ந்து ரன்களை வழங்கி வருவது அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இப்போட்டியில் அவர்கள் பந்துவீச்சில் ஒருசில மாற்றங்களை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் உத்தேச லெவன்: ஷிகர் தவான் (கே), ஜானி பேர்ஸ்டோவ், ஜிதேஷ் ஷர்மா, அஷுதோஷ் சர்மா, சாம் கரன், லியாம் லிவிங்ஸ்டோன், ஷஷாங்க் சிங், ஹர்ப்ரீத் பிரார், ஹர்ஷல் படேல், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ்

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. கடைசியாக குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கடைசி பந்தில் தோல்வி அடைந்ததால் தொடர்ச்சியாக 5ஆவது வெற்றியை பதிவு செய்யும் வாய்ப்பை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவறவிட்டிருந்தது. அதிலும் அப்போட்டியில் 19ஆவது ஓவரை வீசிய குல்தீப் சென், 20ஆவது ஓவரை வீசிய அவேஷ் கான் ஆகியோர் கூட்டாக 12 பந்துகளில் 35 ரன்களைக் கொடுத்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

இதனால் இன்றைய போட்டியில் சந்தீப் சர்மா, நந்த்ரே பர்கர் ஆகியோர் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் சஞ்சு சாம்சன், ரியான் பராக் இணை தொடர்ந்து சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களுடன் ஜோஸ் பட்லரும் ஃபார்மிற்கு திரும்பியுள்ளது அணிக்கு சாதகமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் நட்சத்திர வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடர்ந்து ரன்களை சேர்க்க முடியாமல் தடுமாறி வருவது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதனால் இன்றைய போட்டியில் அவர் ஃபார்முக்கு திரும்புவார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. 

ராஜஸ்தான் ராயல்ஸ் உத்தேச லெவன்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், துருவ் ஜூரல், ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரெண்ட் போல்ட், அவேஷ் கான், நந்த்ரே பர்கர், யுஸ்வேந்திர சாஹல்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை