ஜெய் ஷா கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கண்டனம்!

Updated: Wed, Oct 19 2022 18:08 IST
PCB says Jay Shah's statement can 'split' cricketing communities, requests ACC to call emergency mee (Image Source: Google)

பிசிசிஐ கூட்டத்துக்குப் பிறகு பேட்டியளித்த பிசிசிஐ செயலாளரும் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் (ஏசிசி) தலைவருமான ஜெய் ஷா, 2023 ஆசியக் கோப்பைப் போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் இந்திய அணி அங்குச் செல்லாது. எனவே பொதுவான இடத்தில் ஆசியக் கோப்பை நடைபெறும் என்றார். ஜெய் ஷாவின் இந்தக் கருத்துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. 

இதுதொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசியக் கோப்பைப் போட்டியைப் பொதுவான இடத்தில் நடத்துவது பற்றிய ஜெய் ஷாவின் கருத்துகள் ஆச்சர்யத்தையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் எவ்வித ஆலோசனையும் செய்யாமல் இக்கருத்து கூறப்பட்டுள்ளது. 

1983-ல் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கு எதிரானதாக இக்கருத்து உள்ளது. ஆசியப் பகுதியில் கிரிக்கெட் வளர்ச்சி பெறுவதற்காகவும் அதன் உறுப்பினர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் உருவாக்கப்பட்டது. 

ஜெய் ஷாவின் கருத்துகள் ஆசிய மற்றும் சர்வதேச கிரிக்கெட் நாடுகளிடையிலான உறவில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்தியாவில் நடைபெறவுள்ள 2023 ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி மற்றும் வருங்காலத்தில் இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் பங்கேற்பதிலும் பாதிப்பை ஏற்படுத்தும். 

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் மற்றும் ஏசிசி தலைவரிடமிருந்து இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எங்களுக்கு வரவில்லை. எனவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க உடனடியாகக் கூட்டம் நடத்த வேண்டும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் கோரிக்கை விடுக்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.  

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை