பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் அதிவேகப்பந்து வீச்சாளராக அறியபடுபவர் ஹாரிஸ் ராவுஃப். இவர் இதுவரை பாகிஸ்தான் அணிக்காக ஒரு டெஸ்ட், 37 ஒருநாள் மற்றும் 66 டி20 போட்டிகளில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மணிக்கு 150+ வேகத்தில் பந்துவீசும் திறன் கொண்ட இவர், எதிரணி பேட்டர்களை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசியதுடன், பாகிஸ்தான் அணியின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராகவும் செயல்பட்டு வந்தார். 

Advertisement

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக கருதப்பட்ட ஹாரிஸ் ராவுஃப் ரன்களை வாரி வழங்கியதன் காரணமாக அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறமுடியாமல் லீக் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஹாரிஸ் ராவுஃப் பங்கேற்காமல் தொடரிலிருந்து விலகினார். 

Advertisement

அதேசமயம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த பிக்பேஷ் லீக் டி20 தொடரில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக ஹாரிஸ் ராவுஃப் விளையாடினார். இதனால் பாகிஸ்தான் அணி அனுபமில்லாத வேகப்பந்து வீச்சாளர்களுடன் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்றதுடன், அத்தொடரில் 3-0 என்ற கணக்கில் படுதோல்வியையும் சந்திதது. இதன் காரணமாக ஹாரிஸ் ராவுஃப் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. 

இந்நிலையில், கடந்த டிசம்பர் 01, 2023ஆம் ஆண்டு முதல் ஹாரிஸ் ராவுஃபின் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், கூடுதலாக வரும் ஜூன் 30, 2024ஆம் தேதி வரை எந்தவொரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் விளையாடுவதற்கான தடையில்லா சன்றிதழ் (NOC) அவருக்கு வழங்கப்பட மாட்டாது எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதிரடியான முடிவை அறிவித்துள்ளது. 

இதுகுறித்து பிசிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மூலம் நடத்தப்பட்ட முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு, ஹரிஸ் ராவுஃபின் மத்திய ஒப்பந்தம் டிசம்பர் 1, 2023 முதல் நிறுத்தப்பட்டது, மேலும் வெளிநாட்டு லீக்கை விளையாடுவதற்கு தடையில்லா சான்றிதழும் (NOC) வரும் ஜூன் 30, 2024 வரை அவருக்கு வழங்கப்படாது என்பதை அறிவிக்கிறோம். 

மேலும் ஹாரிஸ் ராவுஃப் தன்மீதான குற்றச்சாட்டுகள் குறித்து பதிலளிக்கு ஜனவரி 30, 2024 அன்று பிசிபி வாய்ப்பளித்தது. ஆனால் அந்த விசாரணையின் முடிவில் ஹாரிஸ் ராவுஃபின் பதில் எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எந்தவொரு பாகிஸ்தான் விளையாட்டு வீரருக்கும் தன் நாட்டிற்காக விளையாடுவது மிகப்பெரும் மரியாதை மற்றும் பாக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். ஆனால் எந்தவொரு மருத்துவ அறிக்கையும் அல்லது நியாயமான காரணமும் இல்லாத நிலையில் பாகிஸ்தானின் டெஸ்ட் அணியில் இடம் பெற மறுப்பது என்பது மத்திய ஒப்பந்தத்தை மீறுவதாகும்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

இதன் காரணமாக ஹாரிஸ் ராவுஃப் இனி தனது தடைக்காலம் முடிவும் வரை எந்தவொரு வெளிநாட்டு லீக் தொடர்களிலும் பங்கேற்க முடியாது. அதேசமயம், அவர் நடப்பாண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News