WI vs ENG, 3rd T20I: பரபரப்பான ஆட்டத்தில் விண்டீஸை வீழ்த்தி இங்கிலாந்து த்ரில் வெற்றி!

Updated: Sun, Dec 17 2023 13:42 IST
Image Source: Google

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடைபெற்று முடிந்த 2 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

அதன்படி களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 8 ரன்களிலும், கைல் மேயர்ஸ் ரன்கள் ஏதுமின்றியும் என விக்கெட்டை இழந்தனர். அதன்பின் இணை நிகோலஸ் பூரன் - ஷாய் ஹோப் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். இதில் 2 சிக்சர், ஒரு பவுண்டரி என 26 ரன்கள் எடுத்திருந்த ஷாய் ஹோப் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்களை எடுத்திருந்த கேப்டன் ரோவ்மன் பாவெலும் விக்கெட்டை இழந்தார். 

அதேசமயம் மறுபக்கம் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த நிக்கோலஸ் பூரன் 6 பவுண்டரி, 6 சிக்சர்களை விளாசி 82 ரன்களிலும், இறுதியில் அதிரடி காட்டிய ரூதர்ஃபோர்ட் 29 ரன்களையும், ஜேசன் ஹோல்டர் 15 ரன்களையும் சேர்த்தனர். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 222 ரன்களைச் சேர்த்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆதில் ரஷித், சாம் கரண் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் கேப்டன் ஜோஸ் பட்லர் - பிலிப் சால்ட் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்ததுடன் முதல் விக்கெட்டிற்கு 115 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்து அணிக்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்தனர். 

அதன்பின் 5 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 51 ரன்கள் எடுத்த நிலையில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த வில் ஜேக்ஸ் ஒரு ரன்னிலும், லியாம் லிவிங்ஸ்டோன் 3 சிக்சர்களுடன் 30 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர். அதேசமயம் மறுபக்கம் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பிலிப் சால்ட் 51 பந்துகளில் சதமடித்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அவருடன் இணைந்த ஹாரி ப்ரூக்கும் தனது பங்கிற்கு 7 பந்துகளில் 1 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 31 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பிலிப் சால்ட் 4 பவுண்டரி, 9 சிக்சர்கள் என 109 ரன்களையும் சேர்த்து அணியின் வெற்றிக்கு உதவினர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 19.5 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன், 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை